இந்திய மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும், மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது இந்திய மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்த பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து மல்யுத்த வீரர்கள் நடத்தும் போராட்டம் தொடர்பாக முதல்முறையாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கருத்து தெரிவித்துள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவரை கைது செய்யக் கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 28ஆம் தேதி திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை கைது செய்தனர். இதையடுத்து தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என சாக்சி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் அறிவித்தனர். மேலும், போலீஸார் தங்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாகவும், ஆனால் பாலியல் தொந்தரவு கொடுத்தவர் பொதுக் கூட்டங்களில் எங்களை தாக்கி பேசுகிறார் எனவும் குற்றம்சாட்டினர்.
மல்யுத்த வீராங்கனைகள், தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீச திங்கள்கிழமை மாலை ஹரித்வார் வந்தனர். கண்ணீருடன் கங்கைக் கரைக்கு சென்ற அவர்களை, உள்ளூர் மக்களும், விவசாய சங்கத்தினரும் சமாதானப்படுத்தி பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதையடுத்து பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை மல்யுத்த வீராங்கனைகள் கைவிட்டனர். மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அவர்கள் 5 நாள் கெடு விதித்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “விளையாட்டு வீரர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டு பல மணி நேரம் காவலில் வைக்கப்பட்டது மிகவும் கவலையளிக்கிறது. உள்நாட்டு சட்டத்துக்கு ஏற்ப இந்திய மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பான விசாரணை முதல் கட்டத்தில் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். இது தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்தை எட்ட வேண்டும். இந்த நடைமுறைகளின்போது மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இதனை இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தல் உரிய நடத்தில் நடத்தி முடிக்கப்பட்ட வேண்டும். அதேநேரத்தில், இந்த விசாரணை விரைந்து முடிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல, ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பும் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. “குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிடம் முறையான விசாரணை நடத்த வேண்டும். கடந்த சில நாட்களாக மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் கையாளப்படும் விதம் கவலை அளிக்கிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி 45 நாட்கள் கெடுவுக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் கூட்டமைப்பை ஐக்கிய உலக மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்யும். அதன் பின்னர் வீரர்கள் தனி கொடியின் கீழ் விளையாட அனுமதிக்கப்படுவார்கள்” என்று ஐக்கிய உலக மல்யுத்த கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.