அரசு பள்ளிகளில் கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று மைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
தஞ்சையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
வருகின்ற 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே பள்ளிகளை சுத்தப்படுத்துதல், வளாகத்தில் புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளி வாகனங்கள் நல்ல முறையில் இயங்குகிறதா? எனவும் அந்தந்த மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்கிற முழு விவரம் தெரியவரும். முதலமைச்சரின் வானவில் மன்றம், புதுமைப்பெண் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு தகுந்தாற்போல் படிப்படியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.