தமிழக உரிமையை விட்டுக்கொடுக்கிறாரா முதல்வர் ஸ்டாலின்?: ஆர்.பி.உதயகுமார்!

மேகேதாட்டுவில் அணையை கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்பு முதல்வர் ஸ்டாலின் கர்நாடகாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டது, தமிழக உரிமை விட்டுக் கொடுக்க ஆயத்தமாகி விட்டாரா என்று அச்சத்தை ஏற்பட்டுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

காவிரி நீர் பிரச்சனை என்பது உயிர் பிரச்சினையாகும், 20 மாவட்டத்தில் விவசாய குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா விவசாயிகளின் நெற்களஞ்சியத்துக்கு உயிர் ஆதாரமாகவும் உள்ளது. காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு எடுத்த நடவடிக்கைகளை முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிசாமியும் தடுத்து நிறுத்தினார்கள். குறிப்பாக 19.2.2013 அன்று மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் ஜெயலலிதா வெளியிட்டார்கள். இதனைத் தொடர்ந்து ‘காவிரி தாய்’ என்று டெல்டா மக்கள் புகழாரம் சூட்டினார்.

அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா வழியில் மாபெரும் சட்டப் போராட்டம் நடத்தி 16.12.2018 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் பங்கீடு குழுவை அமைக்க வரலாற்று தீர்ப்பை பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் 50 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றித் தந்தார். மேலும் காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார். இதனால் விவசாயிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ‘காவிரி காப்பாளர்’ என்ற பட்டத்தை சூட்டினார். கர்நாடக அரசு அணைகட்ட முயற்சி செய்யும்போதெல்லாம் மத்திய அரசிடம் பேசி தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாது, பாரத பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் இது குறித்து கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி வைத்து தடுத்து நிறுத்தினார். அதிமுகவுக்கு தான் காவிரி உரிமையை மீட்டு தந்த சிறப்பு உண்டு.

தற்போது கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் மேகேதாட்டுவில் அணை கட்டுவோம் என்று கூறி இதற்காக ரொம்ப 9,000 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது. இது தெரிந்தும் கர்நாடக முதல்வர் பதவி ஏற்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டது தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க ஆயத்தமாகி விட்டாரோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் அணை கட்டுவோம் என்று கூறி இருப்பதால் நம் தமிழக மக்களிடத்தில் கவலையும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் வாய் திறக்கவில்லை. அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை கடுமையான கண்டனமாக இல்லை. இதன் மூலம் ஜீவாதார உரிமையில் அரசு கவனம் செலுத்தவில்லையோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து எடப்பாடி பழனிசாமி கடுமையான கண்டனத்தை தெரிவித்து தொடர் போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே முல்லை பெரியார் பிரச்சனையில் நமது உரிமை பறிபோகும் போது போர்க் குரல் எழுப்பி, 5 மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். விவசாயிகளின் தோழராக திகழும் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் உரிமைகளை தொடர்ந்து காப்பாற்ற போராடுவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.