3 அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணா சாலையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து துணை மேயர் மகேஷ்குமாரின் 169-வது வார்டு கவுன்சிலர் மேம்பாட்டு நிதியின் கீழ், எல்.டி.ஜி.சாலை மற்றும் வேளச்சேரி பிரதான சாலையில் ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு கட்டிடம் மற்றும் ரேஷன் கடைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதையடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிதம்பரம் குழந்தை திருமணம் விவகாரத்தில் நாங்கள் தொடர்ந்து பதில் அளித்து வருகிறோம். இந்த விவகாரம் தொடர்ந்து விமர்சனமாக வேண்டாம் என்று நினைக்கிறோம். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2 சிறிய குறைகளை சரிசெய்தது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட கல்லூரி டீன்கள் டெல்லியில் தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகளிடம் தந்துள்ளார்கள். இது சரியாக இருக்கிறதா என்று அவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளார்கள். எனவே, 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து ஆகாது. அக்கறை இல்லாதவர்கள் தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்ட வாக்கியங்கள் சற்று கடினமாகவே இருந்தது. எனவே, இதுகுறித்து மத்திய மந்திரிகள் மன்சுக் மாண்டவியா, சர்பானந்த சோனாவால் ஆகியோரை சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளோம்.
தமிழ்நாட்டிற்கு ஒரு மாத காலத்தில் மட்டுமே 11 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் புதிதாக வந்துள்ளன. பல்வேறு புதிய கல்லூரிகள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். இதுகுறித்து கவர்னரும், எதிர்கட்சி தலைவரும் விமர்சித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள் சொல்லும் ஒரு கருத்தாகவே இதை பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.