ஒடிசா ரெயில் விபத்துக்கு பொறுப்பு ஏற்று ரெயில்வே மந்திரி ராஜினாமா செய்யாவிட்டால் காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
மணிப்பூர் விவகாரத்தில் பா.ஜ.க. அரசு, அங்கு ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அனுப்பி மக்கள் மத்தியில் மத அடிப்படையிலான பிரிவினைவாதத்தை ஏற்படுத்த பல்வேறு வழிவகைகளை ஏற்படுத்தியது. அதே வேளை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழ் கலாசாரத்துக்கு எதிராகவும் கருத்து கூறி வருகிறார். பிரதமர் மோடி வந்த பிறகுதான் இந்தியாவில் வளர்ச்சி வந்ததாக கவர்னர் தெரிவித்து இருக்கிறார் அது தவறான விஷயம். மோடி வந்த பிறகுதான் தொழில் வளர்ச்சி குறைந்து உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 9-ல் இருந்து 4 சதவீதமாக குறைந்துவிட்டது.
ஒடிசா ரெயில் விபத்துக்கு இன்று வரை யாரும் பொறுப்பேற்று கொள்ளவில்லை. ஏன், ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனது பதவியை ராஜினாமா செய்யாமல் இருக்கிறார் என்று தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டின் நேரடி மேற்பார்வையின் கீழ் விசாரணை நடைபெற வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வரும். இதற்கு சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை. இன்னும் ஒரு வார காலத்தில் ரெயில்வே துறை மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.