அரசியல் விளையாட்டில் நாம் ஒருங்கிணைந்து நின்றால் இந்தியாவே காணாத வெற்றியை பெற முடியும் என தஞ்சாவூரில் வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
அதிமுகவில் நீண்ட போராட்டத்துக்குப் பின் எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராகிவிட்டார். அவரது வசமாகிவிட்டது அதிமுக. இருந்த போதும் ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி இன்னமும் சட்டப் போராட்டங்களை நம்பிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், அதிமுகவின் அனைத்து அணிகளையும் சாவதற்குள் சேர்த்து வைப்பேன் என சபதம் போட்டு வருகிறார் சசிகலா. இந்த நிலையில் அதிமுக ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் வைத்திலிங்கம் இளைய மகன் திருமண விழா இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. இத்திருமணத்துக்கான அழைப்பிதழை டிடிவி தினகரனிடம் நேரில் கொடுத்தார் வைத்திலிங்கம். அதேபோல சசிகலாவிடமும் நேரில் கொடுத்தார் வைத்திலிங்கம். ஆனால் சசிகலா உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் இந்த நிலைமையில் தம்மால் நேரில் வர இயலாது என தெரிவித்துவிட்டார். மேலும் வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவுக்காகவே இன்று நடைபெற அமமுக பொதுக்குழு கூட்டத்தை டிடிவி தினகரன் ஒத்திவைத்திருந்தார்.
இன்றைய திருமண விழாவில் பங்கேற்று பேசிய ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆருக்கு பிடித்த தேதி 7-ந் தேதி. அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தில் சகோதரர்களிடையே சிறு சிறு மனகசப்புகள் இருந்தாலும் சோழமண்டலத்தில் ஒன்றாக கூடி மணமக்களை வாழ்த்துகிறோம். அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக உருவாக்கினார் எம்ஜிஆர். அவருக்குப் பின்னர் யாராலும் வெல்லவே முடியாத மாபெரும் இயக்கமாக வளர்த்தெடுத்தார் ஜெயலலிதா. எம்ஜிஆர் காலத்தில் 30 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டதாக அதிமுக இருந்தது. 30 ஆண்டுகளில் இந்த இயக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா. அதிமுகவை எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத மாபெரும் எஃகு கோட்டையாக மாற்றியவர் ஜெயலலிதா. இந்த இயக்கத்தின் சாதாரண தொண்டனாக இருப்பதே நமக்கு பெருமை. அனைவரும் ஒன்றாக சேர்ந்து செயல்படவேண்டும் என்றுதான் அனைத்து இதயங்களும் சொல்கின்றன. அரசியல் விளையாட்டில் நாம் ஒருங்கிணைந்து நின்றால் இந்திய அளவில் யாரும் பெறாத வெற்றியை பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.