ஆருத்ரா மோசடி வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கி, விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு உள்ளது தெரியவந்தது. அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், படத் தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ தம்மை அணுகினார். அது தொடர்பாக மட்டுமே பணப் பரிவர்த்தனை நடந்தது. தனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருப்பதால், விசாரணைக்கு நேரடியாக ஆஜராக முடியவில்லை என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த மனு குறித்து பதிலளிக்க இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.