கருணாநிதிக்கான நூற்றாண்டு விழா சனாதனத்திற்குச் சாவுமணி அடிக்கும் என சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றியுள்ளனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய சி.பி.ஐ.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
13 வயதிலே ஒரு சரித்திர நாவலை எழுதியவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது கலைஞர் கருணாநிதி தான். 13 வயதில் எப்படி ஒருவர் ஒரு நாவலை எழுத முடியும்? இந்தத் தகவல் இட்டுக்கட்டியதாக இருக்கக்கூடும் என்று நினைத்து வரலாற்று ஆசிரியர்களை விசாரித்தால், அவர் எழுதிய செல்வ சந்திரா நாவலின் ஒரு பாதி முரசொலி அலுவலகத்தில் இருக்கிறது என்ற தகவலைச் சொல்கிறார்கள். அதன் முன்னுரையிலே கருணாநிதி 13 வயதில் எழுதியது: இன்றைய திராவிட நாடு அதன் கலைகளையும், நாகரிகத்தையும் இழந்து சாதிய மூடநம்பிக்கைகளில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழை அழித்தொழிக்க சதி வேலைகள் தொடங்கி இருக்கின்றன. திராவிடர்கள் விழித்தெழ வேண்டிய தருணம் இது என எழுதி இருக்கிறார். அதில் ஒரு எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை இல்லாமல் எழுதி இருக்கிறார்.
13 வயதிலேயே சரித்திர நாவல் எழுதும் அளவுக்கு, திராவிட நாட்டைப் புரிந்துகொண்டு எழுதும் அளவுக்கு ஒரு தனி வார்ப்பாக கருணாநிதி இருந்திருக்கிறார். ஆனால், இன்று சென்னை ஆளுநர் மாளிகையில் அமர்ந்திருக்கும் அரைவேக்காடு ஆளுநருக்குக் கருணாநிதியின் அந்த அறிவில் அரை சதமானம் கூட இல்லை என்பது வேதனையாக இருக்கிறது. திராவிடத்தைப் பற்றி, தமிழ்நாட்டைப் பற்றி, தமிழைப் பற்றி, தமிழர்களின் தொழில் வளத்தைப் பற்றி என்னவெல்லாம் பேசுகிறார் ஆளுநர்? அரசின் மாளிகையில் அமர்ந்துகொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாமா?
இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் தலைவர் கருணாநிதி போல் யாருமில்லை. எந்த ஒரு கட்சியும் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று நினைப்பார்கள். நாட்டிற்கு ஒரு பிரச்சனை வரும்போது அப்பிரச்சனையை விடப் பதவி முக்கியமல்ல என எண்ணியவர் கருணாநிதி. இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டைச் சட்ட பாதுகாப்போடு கொடுத்தவர் கருணாநிதி. அருந்ததிய மக்களுக்கு 3% இட ஒதுக்கீட்டைக் கொடுத்தவர் கருணாநிதி. இன்று சனாதனத்தை அரியணை ஏற்ற நினைக்கிறார்கள். கருணாநிதிக்கான நூற்றாண்டு விழா சனாதனத்திற்குச் சாவுமணி அடிக்கும் விழாவாக உள்ளது. அன்று தேசம் தலைவர் கருணாநிதியை எதிர்பார்த்தது. அதுபோன்று இன்று சனாதனத்தை வீழ்த்த தலைவர் ஸ்டாலின் அவர்களை எதிர்பார்க்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.