ஊட்டி மலை ரயில் தடம்புரண்டு விபத்தால் சேவை ரத்து!

குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் தடம் புரண்டது. ரயில் தடம் புரண்டதால், மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்ட மலை ரயிலில், கடைசி பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். யாருக்கும் எந்த வித காயமும் இல்லை. மலை ரயில் தடம் புரண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து, தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் பொறுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. அங்கு இயக்கப்படும் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள். நீலகிரி மலை ரயில் யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தனது குடும்பத்தினருடன் உதகையில் இருந்து மலை ரயில் மூலம் குன்னூர் சென்றார். ஊட்டி – குன்னூர் இடையே கேத்தி பள்ளத்தாக்கின் இயற்கை காட்சி, படகு இல்லம் குகை உள்ளிட்டவற்றை கடந்து ரயில் சென்றதை பார்த்து ரசித்தார்.

இந்நிலையில், இன்று குன்னூர் – மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் தடம்புரண்ட நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில், ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் இருந்து வரும் சூழலில் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.