பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

இந்தியா முழுவதும் உள்ள பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் நேற்று நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்களின் முன்னிலையில் பேசிய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அகில இந்திய அளவில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

95 ஆண்டுகள் ஆண்டுகள் வாழ்ந்த கருணாநிதி இன்னும் 5 ஆண்டுகள் கூடுதலாக வாழ்ந்திருந்தால் இதே மேடையில் விழா நாயகராக இங்கே அமர்ந்திருப்பார். ஆனால், உடல் நலிவுற்றதன் காரணமாக நம்மை விட்டுப் பிரிந்தார். பிரிந்தார் என்பதை விட எங்கும் நம்முடன் இருக்கிறார். எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும், எந்த நிலைப்பாடுகளை எடுத்தாலும், தலைவர் கருணாநிதி கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்ற நினைப்போடுதான் நான் அதனைச் செய்கிறேன். இந்த மேடையிலும் கருணாநிதி அமர்ந்துகொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், பேராசிரியரும் தான் நம்மை நாள்தோறும் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் உயிரே, எங்கள் இயக்கே, எங்கள் கலங்கரை விளக்கமே உங்கள் 100வது பிறந்தநாளை கொண்டாடுகிறோம். நீங்கள் எப்போதும் உடன் இருக்கும் உடன்பிறப்புகளோடுதான் இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம்.

திமுக தோன்றிய வடசென்னை பகுதியில் நூற்றாண்டை கொண்டாடுவது சிறப்பு.நான் சீமான் வீட்டுப் பிள்ளை அல்ல, சாமானியர் வீட்டுப் பிள்ளை என்று சொன்னவர் கருணாநிதி. கருணாநிதியின் ஆட்சி எப்போதும் சாமானியர்களின் ஆட்சி தான். திமுக ஆட்சியே ஏழை எளிய பாட்டாளிகளின் ஆட்சி தான். திமுக பேரறிஞர் அண்ணா தலைமையில் முதல் முறை ஆட்சிப் பொறுப்பேற்ற போது முரசொலி இதழிலே தலைவர் கருணாநிதி, “ஏழைக் குலத்தில் உதித்த ஒரு தமிழன் ஏறுகிறான் அரசுக் கட்டில்.. இனி ஏழைகளுக்கு வாழ்வு வந்தது” என்று எழுதினார். பேரறிஞர் அண்ணா தலைமையில் இருந்த ஆட்சியாக இருந்தாலும் சரி – அதைத் தொடர்ந்து தலைவர் கருணாநிதி பொறுப்பேற்று நடத்திய ஆட்சியாக இருந்தாலும் சரி, ஏழைகள் – தொழிலாளர் தோழர்கள் மனமகிழ்ச்சியோடு சிரிக்கும் ஆட்சியாகத்தான் இருந்தது. இப்போதும் அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது.

எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது ஜனநாயக போர்க்களம். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்பதை தீர்மானிப்பதற்கான தேர்தல் அது. 5 வருடங்களுக்கு ஒருமுறை வரும் ஜனநாயக சடங்கு அல்ல. 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜனநாயக அமைப்பு முறையையும், இந்தியாவின் கூட்டாட்சியையும் காப்பாற்றுவதற்கான தேர்தல். இந்தியா முழுவதும் உள்ள பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை, மாறுபாடுகளை மறந்து இந்தியாவை காக்க ஒன்று சேர்ந்தாக வேண்டும்.

அறிவாலயத்தில் இருந்து இந்த பொதுக்கூட்டத்துக்கு நான் காரில் வந்துகொண்டிருந்தபோது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் போனில் தொடர்பு கொண்டார். வரும் 23ஆம் தேதி பீகார் பாட்னாவிற்கு வர வேண்டும். அகில இந்திய தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர இந்தக் கூட்டம் நடைபெறவிருக்கிறது என்றார். தமிழ்நாட்டில் எப்படி ஒரு வலுவான கூட்டணியை அமைத்தோமோ, அதேபோல, நாடு தழுவிய அளவில் மதவாத, பாசிச, யதேச்சதிகார பாஜக ஆட்சியை அகற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். தேவையற்ற முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் தந்துவிடக்கூடாது. பிரிவினைகளால் பாஜக வெல்லப் பார்க்கும். சாதியால், மதத்தால், பிரிவினையை விதைத்து வெல்லும் அந்தக் கட்சி, அரசியல் கட்சிகளின் முரண்பாடுகளைப் பயன்படுத்தி ஜெயிக்கப் பார்க்கும். அதற்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் யாரும் இரையாகிவிடக் கூடாது. எத்தகைய பொய்களைச் சொல்வதற்கும் பாஜகவினர் தயங்கமாட்டார்கள்.

அவதூறுகளை அள்ளி வீசவும் அதனைப் பரப்பவும், பாஜகவிடம் ஏவலுக்கு கீழ்படியும் சிந்தனையற்ற பொறுப்புணர்ச்சியால் மழுங்கடிக்கப்பட்ட ஒரு கூட்டம் இருக்கிறது. அதற்கு தமிழ்நாட்டில் ஆளுநராக இருப்பவர் செய்யும் சித்து விளையாட்டுகளை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறோம். பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் என்ற உணர்ச்சியோடு இன்று கிளம்பி இருக்கிறோம். எதை வேண்டுமானாலும் பேசட்டும், கவலை இல்லை. மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். ஒற்றுமை, சகோதரத்துவம், உண்மையான வளர்ச்சியின் மீது, இந்த நாட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள் நம்மோடு இருக்கிறார்கள். நம் உள்ளத்தை ஒற்றுமையால் கட்டமைப்போம். கருணாநிதி அடிக்கடி சொல்வார், நீ நான் என்றால் உதடுகள் ஒட்டாது, நாம் என்றால் தான் உதடுகள் கூட ஒட்டும். கருணாநிதி நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களோடு இந்திய ஜனநாயக திருவிழாவையும் நாம் கொண்டாடக்கூடிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் நமக்காக அல்ல, நாட்டிற்காக. ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக நடைபெறக் கூடிய தேர்தல் என்பதை மனதில் வைத்து இந்த விழாவில் உறுதி எடுப்போம், சபதம் ஏற்போம். அதுதான் நம் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.