நாளை மாலை சேலத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
பொதுவாக செயல்வீரர்கள் கூட்டம் என்பது அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் அல்லது மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் தலைமையில் நடைபெறுவது வழக்கம். ஆனால் முதல்முறையாக மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் தலைவரே கலந்துகொள்ளவிருக்கிறார். இதன் மூலம் சேலத்தில் நாளை மாலை நடைபெறும் திமுக செயல்வீரர்கள் கூட்டமானது கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நாளைய தினம் ஸ்டாலின் முக்கிய ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் துரைமுருகனும் கலந்துகொள்கிறார் என்பது கூடுதல் தகவலாகும்.
இதனிடையே இது தொடர்பாக திமுக தலைமைக்கழக விடுத்துள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் முன்னிலையில், சேலம் கிழக்கு, சேலம் மத்திய, சேலம் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழகச் செயலாளர்கள் பங்குபெறும் கழகச் செயல்வீரர்கள் கூட்டம், 10-06-2023 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில், சேலம், ஐந்து ரோடு, ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடைபெறும். அப்போது சேலம் கிழக்கு, சேலம் மத்திய, சேலம் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.