மேகதாது அணை விவகாரம், கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம், மின்கட்டண உயர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். இதற்கு முன்னதாக காவிரி டெல்டா பகுதிகளில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் செய்தியாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:-
காவிரியின் குறுக்கே எந்த காரணத்தை கொண்டும் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். தற்போதைய காங்கிரஸ் அரசு மட்டுமல்ல முந்தைய பாஜக அரசும் மேகதாது அணை கட்ட முயற்சித்தது. தமிழ்நாடு அரசு ஒருபோதும் இதனை அனுமதிக்காது.
நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கான அரசின் தொகுப்பு விரைவில் அறிவிக்கப்படும். கருணாநிதி பெயரில் கலைஞர் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் அல்லது ஏற்கனவே உள்ள பல்கலைக் கழகத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும். சென்னை பல்கலைக் கழகத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டுவது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம். தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் வருமா எனில் மத்திய அமைச்சரவையில்தான் மாற்றம் வரும் என கூறப்படுகிறது. அதாவது தம்ழிநாடு அமைச்சரவையில் மாற்றம் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு கிடையாது; தமிழ்நாட்டில் இலவச மின்சார சலுகைகள் அனைத்தும் தொடரும். வணிக பயன்பாட்டு மின் கட்டணமும் கூட பைசா அளவில்தான் உயர்த்தப்பட்டுள்ளது. உதய் திட்டமே மின் கட்டண உயர்வுக்கு காரணம். அதிமுக ஆட்சியில் கையெழுத்தான உதய் திட்டமே மின் கட்டண உயர்வுக்கு காரணம்.
ஆளுநரிடம் மசோதாக்கள் நிலுவையில் இருப்பது தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. டாஸ்மாக் மதுபான கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும். பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 23-ல் நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறேன். காவிரி பாசன பகுதிகளில் அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்படும். தற்போது வரை 96% கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துவிட்டன. நடப்பாண்டும் திட்டமிட்டபடி குறுவை சாகுபடிக்கான ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.