அரிசி கொம்பன் எனும் அரிகொம்பன் யானைதான் உண்மையான குற்றவாளியா? என விவாதத்தை தொடங்கி வைத்துள்ளார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை செயலாளர் துரை வைகோ.
இது தொடர்பாக துரை வைகோ தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு-கேரளா மாநில பகுதிகளை பரபரப்புடன் வைத்திருந்த அரிசிக்கொம்பன் யானை ஒரு வழியாகப் பிடிக்கப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது. யார் இந்த அரிக்கொம்பன் என்ற அரிசிக்கொம்பன்? எதற்காக அதற்கு இந்தப் பெயர் வந்தது? அரிகொம்பன் எனும் அரிசி கொம்பன்: கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்னர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில்,சின்னக் கானல் என்ற பகுதியில் இருக்கும் காட்டில் தான் அரிசிக்கொம்பன் என்ற ஆண் யானை பிறந்தது. அரிசிக் கொம்பனுக்கு இரண்டு வயது இருக்கையில் அதன் தாய் யானைக்கு காலில் காயம் ஏற்பட்டு அதனால் இறந்து போனது. தாய் இறந்த சோகத்தை அரிசிக் கொம்பன் யானைக் குட்டியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அது தன் தாய் இறந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல், தாய் யானை இறந்த இடத்தை சுற்றிச் சுற்றியே வந்திருக்கிறது. அந்த இடத்திலேயே மணிக்கணக்காக நின்றிருக்கிறது. பின் ஒரு வழியாக காட்டிற்குள் சென்றது.
தன் தாயிடம் பால் குடி கூட மாறாத நிலையில், அந்த இளம் வயதிலேயே தாயைப் பிரிந்ததால், உணவுக்காக அந்தப் பகுதிக்குள் இருக்கும் தோட்டங்களுக்குள் புகுந்து கிடைத்ததை எடுத்து உண்ணத் தொடங்கியது அந்த யானைக் குட்டி. அதனால் அந்தப் பகுதியில் வசித்து வந்த பழங்குடியின மக்கள், இந்த யானைக்கு கள்ளக் கொம்பன் என்ற பெயரை வைத்து அழைத்தனர். கள்ளன் என்றால் திருடன். மிகப்பெரிய தந்தம் இருந்ததால் கொம்பன். தோட்டங்களுக்குள் புகுந்து கிடைத்ததை தின்ற கள்ளக் கொம்பன் யானை, நாளடைவில் குடியிருப்புப் பகுதிகள், கடைகள் போன்ற பகுதிகளுக்கும் புகுந்து அங்கு கிடைத்த அரிசி, சீனி போன்றவற்றை எடுத்து உண்ணத் தொடங்கியது. இதில் அரிசியின் சுவை அந்த யானைக்குப் பிடித்துப் போகவே, அரிசியைத் தேடி அடிக்கடி வரத் தொடங்கியது. எனவே கள்ளக் கொம்பன் என்ற பெயர் அரிக்கொம்பன் என்றாகிப் போனது. அரிசிக்கு மலையாளத்தில் அரி என்று பெயர். அதனால் அரிசியைத் தேடிப் பிடித்து தின்னும் பெரிய தந்தம் கொண்ட யானை என்ற பொருளில் மலையாளத்தில் அரிக்கொம்பன் என்றும் தமிழில் அரிசிக்கொம்பன் என்றானது.
அரிசிக் கொம்பன் யானையின் நோக்கம் காட்டில் இருக்கும் மக்கள் குடியிருப்புப் பகுதியில் கிடைக்கும் அரிசியை எடுத்து உண்பது மட்டும் தானே தவிர, மனிதர்களைக் கொல்வதல்ல. ஆனால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் அரிசிக் கொம்பன் யானை வருவதைத் தடுக்கும் பொருட்டு, அதை மனிதர்கள் எதிர்க்கத் துவங்கிய போது தான் யானை-மனிதன் மோதல் ஏற்பட்டு, அதனால் சில உயிர்கள் பலியாகின. அதனால் அரிசிக் கொம்பன் யானையைப் பிடித்து அதை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி அரிசிக் கொம்பன் யானை, அதன் வாழ்விடமான சின்னக்கானல் வனப் பகுதியில் இருந்து பல கட்ட போராட்டங்களுக்குப் பின் பிடிக்கப்பட்டு, தமிழக-கேரளப் பகுதியில் இருக்கும் பெரியாறு வனப் பகுதிக்குள் கொண்டு வந்து விடப்பட்டது. அரிசிக் கொம்பன் நடமாட்டத்தைக் கண்காணிக்க அதன் கழுத்தில் ஜிபிஎஸ் ரேடார் பட்டையும் கட்டப்பட்டது. அரிசிக் கொம்பன் யானை சின்னக்கானல் பகுதியில் இருந்து அகற்றப்பட்ட பின் தான், அந்த யானையால் தங்களுக்கு கிடைத்த மறைமுக நன்மைகளை அந்தப் பகுதி மக்கள் உணர்ந்தனர். அரிசிக் கொம்பன் யானை சின்னக் கானல் காட்டுப் பகுதியில் இருந்தவரை காட்டிற்குள் சட்ட விரோதமாக நடந்து வந்த பல நடவடிக்கைகள் கட்டுக்குள் இருந்தன. யானைகள் வலசை செல்லும் பாதைகளை மறித்து சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட பல சொகுசு விடுதிகளின் உரிமையாளர்கள் பய பீதியில் இருந்தனர். அவர்கள் தான் அரிசிக்கொம்பன் எப்படியாவது பிடிக்கப்பட வேண்டும் என்பதில் மக்களை விட ஆர்வமாக இருந்தனர். இப்படியான மறைமுக நன்மைகளை காலம் கடந்து உணர்ந்த சின்னக்கானல் பகுதி பழங்குடி மக்கள் அரிசிக் கொம்பனை இடமாற்றம் செய்யக் கூடாது, தங்கள் பகுதியிலேயே மீண்டும் விட வேண்டும் என்பதை வலியுறுத்தி குடும்பம் குடும்பங்களாக போராட்டங்களில் இறங்கினர், சாலை மறியல்களை செய்தனர். ஆனாலும் நீதிமன்ற உத்தரவின்படி அரிசிக் கொம்பனை இடம் மாற்றி விட்டனர்.
இயற்கையிலேயே மிகுந்த புத்திக் கூர்மையும், நினைவாற்றலும் கொண்டவைகள் யானைகள். அதன் நினைவில் இருந்து அது பிறந்து, வளர்ந்து, பழக்கப்பட்ட இடத்தை அகற்றுவது இயலாத காரியம். எனவே பெரியாறு வனப்பகுதியில் இருந்த அரிசிக் கொம்பன், தன் பிறப்பிடமான சின்னக்கானல் வனப்பகுதியை நோக்கி பயணிக்கும் வகையில், அப்படியே நடந்து மேகமலை வனப்பகுதிக்குள் புகுந்தது. பெரியாறு வனப்பகுதியில் இருந்து மேகமலை செல்லும் பாதையானது மிகவும் கடினமானது, கரடு முரடானது. இந்தப் பாதையில் நடந்து சென்றதால் அரிசிக் கொம்பன் யானையின் உடலில் பல இடங்களில் பல காயங்கள் ஏற்பட்டன. ஒரு பக்கம் காயங்கள் தரும் வலி, மறு பக்கம் தன் வாழ்விடத்தை நோக்கிச் செல்லும் ஏக்கம் தரும் மனவலி போன்றவற்றால் பரிதவித்து வந்த அரிசிக் கொம்பன், தன் விருப்ப உணவான அரிசியைத் தேடி குமுளி பகுதிக்குள் புகுந்தது. அங்கிருந்து தமிழ்நாட்டின் கம்பம் ஊருக்குள் வந்தது. காட்டு யானையான அரிசிக் கொம்பன் கம்பம் நகருக்குள் புகுந்ததை அடுத்து, துரிதமாக செயல்பட்ட தமிழ்நாடு வனத்துறை அரிசிக் கொம்பனை மயக்க ஊசிகள் மற்றும் கும்கி யானைகள் உதவியுடன் பிடித்து, அங்கிருந்து திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் கொண்டு வந்து விட்டு விட்டனர். இதனால் களக்காடு பகுதி மக்கள்,எங்கே அரிசியைத் தேடிக் கொண்டு அரிசிக் கொம்பன் தங்கள் ஊருக்குள் வந்து விடுமோ என்ற பயத்தில், களக்காடு வனப் பகுதியில் அரிசிக் கொம்பனை விடக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
யானைகளின் வாழ்விடங்களே காடுகள் தான். ஒரு யானை தன் வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான மரங்களை நடும். ஒரு யானை தான் உண்டு, செறித்து வெளியேற்றும் பழங்களின் விதைகளில் இருந்து ஏகப்பட்ட செடிகள் முளைக்கும், அதுவே பின்னாட்களில் நெடிதுயர்ந்த மரங்களாக வளரும். யானைகள் தாங்கள் நடந்து செல்லும் பாதைகளில் எல்லாம் அடர்ந்த காடுகளை உருவாக்கும். உலகில் இருக்கும் யானை இனங்கள் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகள் என்ற இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான யானைகள் காலங்காலமாக தங்களுக்குப் பழக்கப்பட்ட தடத்தில் வலசை போகின்றன. அப்படி யானைகள் வலசை செல்லும் பாதைகளை சட்ட விரோதமாகத் தடுத்து கட்டப்படும் கேளிக்கை விடுதிகள், ஆராய்ச்சி மையங்கள், கார்ப்பரேட் சாமியார்களின் ஆசிரமங்கள் போன்றவற்றால் யானைகளின் வலசைப் பாதைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு தடம் மாறுகின்றன. அதன் வழித்தடம் சுருங்கி, வலசைப் பாதையில் செல்ல முடியாத நிலை உருவாகி, வேறு பாதைகளில் செல்கையில், மக்களின் வசிப்பிடங்களை நோக்கி யானைகள் திரும்புகின்றன. இதனால் யானை-மனித மோதல்கள் கடுமையாகிறது. வலசைப் பாதையை இழக்கும் யானைகள், உணவு,தண்ணீருக்காக தவிப்பது மட்டுமின்றி, வேறு யானை கூட்டத்துடன் இணை சேருவதும் தடுக்கப்பட்டு, பாதிக்கப்படுகிறது. அதனால் பன்முக மரபணு பரிமாற்றம் தடுக்கப்பட்டு, ஒரு ஆரோக்கியமான யானைக் கூட்டம் இயற்கையாக உருவாவதும் தடைபடுகிறது.
வலசைப் பாதையில் கடந்த பல ஆண்டுகளாக மெல்ல மெல்ல அதிகரித்து விட்ட சொகுசு விடுதிகளும், அவர்களால் நடத்தப்படும் அனுமதியற்ற சுற்றுலாக்களும், வனப்பகுதிக்குள் நடத்தப்படும் கேம்ப் பயர்க்களும் யானைகளின் வாழ்விடங்களைப் பெரிதாக பாதிக்கின்றன. இவற்றுடன் யானைகளின் வலசைப் பாதைகளை முற்றாக மறித்து திடீரென முளைத்த கார்ப்பரேட் சாமியார்களும், அவர்களால் வித விதமான பெயர்களில் விடிய விடிய நடத்தப்படும் கேளிக்கை நிகழ்ச்சிகளாலும், அதில் போடப்படும் வானவேடிக்கை பட்டாசுகள், இசை நிகழ்ச்சியுடன் இரவைக் கழிக்கலாம் என விளம்பரங்கள் செய்யப்பட்டு நடத்தப்படும் நிகழ்வுகள் போன்றவற்றாலும் காட்டுப் பெரும் உயிர்களான யானைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றன. தாங்கள் வாழ தாங்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய காட்டை விட்டே விரட்டப்படும் சூழல் யானைகளுக்கு உருவாகிறது. யானைகளைப் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துவது ஏதோ யானைகள் மீது பரிதாபப்பட்டு எழுப்பப்படும் குரல் அல்ல. அது ஒரு அபாய எச்சரிக்கை. காடுகள் மற்றும் உயிர்ச் சூழலின் ஆதார உயிரினங்களே யானைகள் தான். எதிர்கால சந்ததிகளுக்கு உயிர்ச் சூழலை நாம் பத்திரமாக விட்டுச் செல்ல வேண்டுமெனில், அதற்கு யானைகளைப் பாதுகாப்பது மிக மிக அவசியம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில்,மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், யானைகளின் வலசைப் பாதைகள் பல்லாண்டு காலமாக பயன்பாட்டில் இருந்தன. ஆனால், நமது சுயநலத்துக்காக அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறோம். பழக்கப்பட்ட வலசைப் பாதைகள் மறிக்கப்படும்போது தான், புதிய இடத்தை நோக்கி யானைகள் நகர்கின்றன. அதனை உணர்ந்து, வனப்பகுதிகளில் உரிய அனுமதி பெறாத நடவடிக்கைள் எதுவாக இருந்தாலும் அவை தடுக்கப்பட வேண்டும். இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. எல்லா உயிரினங்களுக்குமானதுதான். இந்த பூமியில் உயிரினங்கள் வாழ ஆக்சிஜன் தேவை. ஆக்சிஜன் உருவாக மரங்கள் தேவை. அந்த மரங்கள் உருவாக, யானைகள் கண்டிப்பாக தேவை. இந்த சுழற்சியை உணர்ந்து, உயிரினங்களில் பேருயிரான யானைகளைப் பாதுகாப்பது நம் கடமை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். அழுத்தமாக நம் நினைவில் கொள்வோம், பல உயிர்கள் வசிப்பதற்கு ஆதாரமான, மாபெரும் காடுகளை உருவாக்கும் யானைகளுள் ஒருவர் தான் அரிக்கொம்பன் என்ற அரிசிக்கொம்பன்! இவ்வாறு துரை வைகோ கூறியுள்ளார்.