தமிழரை பிரதமர் ஆக்குவோம், 25 இடங்கள் இலக்கு: அமித் ஷா

மத்தியில் திமுக கூட்டணியில் இருந்தபோது தமிழகத்திற்கு எய்ம்ஸ் கொண்டு வராதது ஏன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தமிழகம் வந்துள்ளார். நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு வந்தடைந்த அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். அதன் பிறகு மத்திய மந்திரி அமித் ஷாவை பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பிரபலங்கள் சந்தித்து பேசினர். அவர்களை மத்திய மந்திரி அமித்ஷாவிடம் அண்ணாமலை அறிமுகம் செய்து வைத்தார். அவர்களின் சாதனைகளுக்காக அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார். இன்று, கோவிலாம்பாக்கம் சென்ற அமித் ஷா, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, தமிழக பாரதிய ஜனதா கட்சியினருடன் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:-

தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்குவோம். தமிழகத்தில் இருந்து இரண்டு பிரதமர்களை தவற விட்டுள்ளோம். தமிழகத்தைச் சேர்ந்த காமராஜர், மூப்பனார் ஆகியோர் பிரதமர் ஆவதை தவறவிட்டுள்ளோம். இவ்வாறு இருமுறை பிரதமர்களை தவற விட தி.மு.க.தான் காரணம். வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிப்போம். அதற்கான பணிகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபடவேண்டும். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க உழைக்க வேண்டும். பாஜக நிர்வாகிகள், பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் வேலூரில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் பெயர் எடுத்துள்ளவர் அண்ணாமலை. தமிழ் மொழியின் தொன்மைக்கு சிறப்பு சேர்த்தவர் பிரதமர் மோடி. காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடத்தி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. திருக்குறளை 23 மொழிகளில் மொழிபெயர்த்து அனைத்து மாநில மக்களும் படிக்க வழிசெய்திருக்கிறார் பிரதமர். 9 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்துக்கு 2.47 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு 95,000 கோடி ரூபாய்தான் வழங்கப்பட்டது. தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிக்காக 58,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. 6 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் குடிநீர் இணைப்பு இல்லாத ஊர்களில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள்ளது. ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு சார்பில் 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது.

11 மாவட்டங்களில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். 2024ல் மீண்டும் ஒருமுறை 300க்கும் அதிகமான தொகுதிகளை பெற்று பாஜக ஆட்சி அமைக்கும். ரூ.50,000 கோடியில் சென்னை-சேலத்திற்கு விரைவு சாலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மெட்ரோ திட்டங்களுக்காக ரூ.72,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்தியில் திமுக கூட்டணியில் இருந்தபோது தமிழகத்திற்கு எய்ம்ஸ் கொண்டு வராதது ஏன். இதற்கு திமுகவினர்தான் பதிலளிக்க வேண்டும். காங்கிரசும், திமுகவும் ஊழல் மட்டுமே செய்யும் கட்சிகள். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12,000 கோடி ஊழல் நடைபெற்றது. கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.