தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என்று அமித் ஷா கூறியது மகிழ்ச்சிதான்: முதல்வர் ஸ்டாலின்!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நவமி திதி நாளில் அணை திறக்கப்பட்டுள்ளது. பருவமழை அபரிமிதமாக பெய்து ஓராண்டுக்கும் மேலாக அணை 100 அடிக்கும் குறையாமல் தண்ணீர் இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டும் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு கோடை காலத்தில் பெய்த கனமழையால் காவிரியில் பெருவெள்ளம் வரவே மேட்டூர் அணை மளமளவென நிரம்பியது. அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டவே பாதுகாப்பு கருதி கடந்த ஆண்டு மே 24ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை இன்று திறந்து வைத்தார். டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. 12 டெல்டா மாவட்டங்களில் 17.37 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேட்டூர் அணையை திறந்து வைத்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். குறுவை சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களை திமுக அரசு உரிய நேரத்தில் வழங்கியது. திமுக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மேட்டூர் அணையில் நீர் சேமிக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியாக உள்ளது என்று கூறினார்.

கடைமடை வரை காவிரி நீர் செல்லும் வகையில் திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உரிய நேரத்தில் நீர் திறப்பதன் மூலம் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் குறுவை நெல் சாகுபடி 48 ஆண்டுகளில் இல்லாத 5.36 லட்சம் ஏக்கரில் 17.76 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.35 அடி, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 867 கனஅடியாக உள்ளது. பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

1.5 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு 19 நாட்களுக்கு முன்னரே மே 24 அன்றே டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி திறம்பட பயன்படுத்தி நெல் உற்பத்தியை உயர்த்தும் நோக்கில் உழவர்கள் செயல்பட வேண்டும். கோடை மழையால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் கணிசமாக அதிகரித்தது. கால்வாய் தூர்வாரும் பணிக்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றதாகவும் கூறினார்.

கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 23 லட்சத்திற்கும் மேலானவர்கள் பயன் பெற்று வருகின்றனர். வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறினார். ரூ.75.95 கோடியில் குறுவை சாகுபடி சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். நடப்பாண்டு 5 லட்சம் ஏக்கருக்கு மேலாக குறுவை சாகுபடி அதிகரிக்கும் என நம்புகிறேன். காவிரி நீரை திறம்பட செயல்படுத்தி, குறுவை சாகுபடி அதிகரிக்க குறுவை நெல் சாகுபடி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 1.6 லட்சம் ஏக்கரில் இதுவரை குறுவை நடவுப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3வது ஆண்டாக மேட்டூர் அணையில் உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, சாகுபடி அதிகரிக்க செய்ய வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன், டெல்டா பாசன கால்வாய் பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தோம். குறுவை சாகுபடிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் ரக விதைகள், உரங்களை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பின்னர் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார். முந்தைய காலங்களில் திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு அதிமுக பெயர் பெற்றது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சில திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட எந்த திட்டமும் முடக்கப்படவில்லை. திமுக அரசு ஆட்சிக்கு வந்து தற்போது வரை அம்மா உணவகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார், திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக அவர் மாற்றினார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்த ஜெயலலிதா, பின்னர் கல்வெட்டில் தனது பெயரைப் பொறித்து திறந்து வைத்தார். இந்த வரலாறு எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வாய்ப்பு இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை தவறவிட்டுள்ளது தமிழகம்; அதற்குக் காரணம் திமுகதான் என்று கூறினார். வரும் காலத்தில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று மேட்டூர் அணையை திறந்து வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், தமிழர் பிரதமராவதை திமுக தடுத்ததாக வெளிப்படையாக சொன்னால் விளக்கம் தரப்படும் என்றும் கூறினார். தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என்று அமித் ஷா கூறியது மகிழ்ச்சிதான். எல்.முருகன் மத்திய அமைச்சராக இருக்கிறார் அவரை பிரதமராக்கலாம் என்று தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின். அமித் ஷாவின் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், மோடி மீது அமித் ஷாவிற்கு என்ன கோபம் என்று தெரியவில்லை என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த திட்டங்கள் என்னவென்று நான் கேட்ட கேள்விக்கு அமித் ஷா பதில் சொல்லவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.