நிதி நிலை சரியான பின்னர் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்: அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பள்ளி பொதுத் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். நிதி நிலை சரியான பின்னர் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து, சாக்லேட் கொடுத்து வரவேற்றார். வருகைப்பதிவு உள்ளிட்ட விவரங்களை ஆசிரியர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டறிந்தார். பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், சீருடை, காலணி, புத்தகப்பை உள்ளிட்டவற்றையும் அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து மாணவர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், பள்ளிகளுக்கு வருகை புரிந்துள்ள மாணவ செல்வங்களுக்கு எனது வாழ்த்துக்கள். மாணவர்களின் நலனே முக்கியம். நன்றாக படித்து பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் 8,340 நடுநிலைப் பள்ளிகள், 3,547 உயர்நிலை மற்றும் 4221 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 16,108 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 46,22,324 மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரவுள்ளனர். அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 1. 31 லட்சம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர் என்று கூறினார்.

6-12ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் அரசு கல்லூரிகளிலும் இடம் கிடைக்கும் வகையில் சேர்க்கை நடத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பள்ளி பொதுத் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. நடப்பாண்டு அதிக அளவில் தேர்ச்சி பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் அதிக தேர்ச்சிக்கு இலக்கு நிர்ணயம் செய்து பணியாற்ற வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போரை தேர்வு இல்லாமல் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து தொடர்பாக மாநில கல்விக் கொள்கையில் ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு லேப்டாப் எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசின் நிதிநிலைமை சீரான பின்னர் லேப்டாப் வழங்கப்படும் என்று தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கு டேட்டா கார்டுடன் இலவச டேப்லெட் வழங்கப்படும் என்று கடந்த 2021ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. ஆனால் கடந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்ட திட்டமான லேப்டாப் கடந்த சில ஆண்டு காலமாக வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.