திருவண்ணாமலை அருகே மனைவியை தாக்கியதாக ராணுவ வீரர் புகார்: எஸ்பி மறுப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படைவீடு கிராமத்தில் வசிப்பவர் ராணுவ வீரர் எம்.பிரபாகரன். ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். இவர், தனது மனைவி தாக்கப்பட்டதாகவும், மானபங்கப்படுத்தப்பட்டதாகவும், காவல் துறையினர் பாதுகாப்பு வழங்க டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு வேண்டுகோள் விடுத்து நேற்று முன்தினம் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

வீடியோவில் பேசும் ராணுவ வீரர் பிரபாகரன், “போளூர் வட்டம் படைவீடு கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில், ரேணுகாம்பாள் கோயில் அருகே என் மனைவி கடை நடத்தி வருகிறார். கடந்த 10-ம் தேதி 120 பேர் வந்து கடையை காலி செய்ய வலியுறுத்தி அந்த கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். மனைவியை அரை நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர். என் குடும்பத்தினரை காப்பாற்றுங்கள்” என மண்டியிட்டு கேட்டுக் கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக எஸ்பி கார்த்திகேயனுக்கு ராணுவ வீரர் பிரபாகரன் புகார் மனு அனுப்பினார்.

இதுகுறித்து எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையிலான வருவாய் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில், எஸ்.பி. கார்த்திகேயன் நேற்று வெளியிட்டு ள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

படைவீடு ரேணுகாம்பாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில், குன்னத்தூர் கிராமத்தில் வசித்த குமார் என்பவர் கட்டிடம் கட்டி உள்ளார். இவர், படைவீடு கிராமத்தில் வசிக்கும் ரணுவ வீரரின் மாமனார் செல்வமூர்த்தியிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.9.50 லட்சம் பெற்றுகொண்டு, மாதம் ரூ.3 ஆயிரம் என வாடகைக்கு விட்டுள்ளார். குமார் இறந்துவிட்டதால், கடையை ஒப்படைக்கக்கோரி அவரது மகன் ராமு, செல்வமூர்த்தியை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில், செல்வமூர்த்திக்கு ராமு ரூ.9.50 லட்சம் கொடுத்தவுடன் செல்வமூர்த்தி கடையை காலி செய்து கொள்வது என உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், செல்வமூர்த்தி கடையை காலி செய்ய மறுத்துள்ளார். இதை தட்டிக்கேட்ட ராமுவை, ராணுவ வீரரின் மைத்துனர்கள் ஜீவா, உதயா ஆகியோர் கத்தியால் வெட்டி தாக்கினர். அப்போது ராணுவ வீரரின் மனைவி கீர்த்தி அங்கு இருந்துள்ளார். ராமுவுக்கு ஆதரவாக செயல்பட்ட சிலர் ராணுவ வீரரின் மனைவி நடத்திவரும் கடையில் இருந்த பொருட்களை உடைத்துள்ளனர்.
ராணுவ வீரரின் மனைவி கீர்த்தியையோ, அவரது தாயாரையோ தாக்கி யாரும் மானபங்கம் செய்யவில்லை. இது மிகைப்படுத்தி கூறிய தகவல் என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக எஸ்.பி. நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில், “ராணுவ வீரரின் மனைவிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி கூறும்போது, “பிரச்சினைக்குரிய இடம் குட்டை புறம்போக்கு என உள்ளது. நீர் நிலை பகுதியில் 14 நபர்கள், கடை மற்றும் வீடுகளை கட்டி, ஆக்கிரமித்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசனை நடத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இந்நிலையில், ராமு கொடுத்த புகாரின் பேரில் ராணுவ வீரரின் மனைவி கீர்த்தி, அவரது சகோதரர்கள் ஜீவா, உதயா உள்ளிட்டோர் மீதும் மற்றும் கீர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ராமு, ஹரிகரன், செல்வராஜ், அவரது மனைவி ஜெயகோபி, மதி உள்ளிட்ட 8 பேர் மீதும் காவல் துறையினர் தனித்தனியே வழக்கு பதிவு செய்துள்ளனர்.