குழந்தை தொழிலாளர் என்னும் கொடிய அவலத்தை முற்றாகத் துடைத்தெறிய வேண்டும்: திருமாவளவன்

குழந்தை தொழிலாளர்முறை என்னும் கொடிய அவலத்தை முற்றாகத் துடைத்தெறிய முன்வர வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் அமைப்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பால் 2002 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. குழந்தை தொழில்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்கு தகுந்த ஆதரவை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு இயல்பான குழந்தைப்பருவத்தை உறுதி செய்வதே இந்த நாளின் நோக்கமாக உள்ளது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாகக் அனுசரிக்கப்படுகிறது. பல கோடி குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் தங்கள் உடல், மன, சமூக அல்லது கல்வி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பகுதிகளில் பணிபுரிந்து வருவதால், அதைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவது அவசியம். குழந்தைத் தொழிலில் ஈடுபடும் குழந்தைகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் குறைந்து வந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக சில இடங்களில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) 2017 ஆம் ஆண்டு அறிக்கை, இந்தியாவில் 15 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 20 சதவீதம் பேர் அபாயகரமான தொழில்கள் மற்றும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், 2 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் 17 வயதிற்கு முன்பே வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மதிப்பிட்டுள்ளது.

குழந்தைத் தொழில்களால் தனிநபர்களுக்கு ஏற்படும் தீங்குகள், குறிப்பாக போதைப்பொருள் கடத்தல், பாலியல் வர்த்தகம் மற்றும் ஆயுத மோதலில் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைப் பற்றி அதிக விழிப்புணர்வைப் பரப்ப இந்த இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் குழந்தைத் தொழில்களால் ஏற்படும் மன மற்றும் உடல்ரீதியான பாதிப்புகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க நிறுவப்பட வேண்டிய முறையான வழிகாட்டுதல்களை இந்த நாள் வலியுறுத்துகிறது.

இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் கடை பிடிக்கப்படுவதை முன்னிட்டு விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

உலகெங்கும் குழந்தைகள் யாவருமே கல்விபெற வேண்டும். விளையாட வேண்டும். மாறாக, வறுமையைக் காரணம் காட்டி, பெற்றோராயினும் அவர்களைத் தொழிலாளர்களாக வதைத்திடக் கூடாது. அந்த வன்கொடுமையை வன்மையாக எதிர்ப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

புரட்சியாளர் அம்பேத்கர் குழந்தை தொழிலாளர் முறையைக் கடுமையாக எதிர்த்ததோடு அதற்கு எதிராக சட்டமும் கொண்டு வந்தார். இந்நாளில் அவரை நன்றியுணர்வோடு நினைவுகூர்வோம். இந்திய கூட்டரசும் மாநில அரசுகளும் குழந்தை தொழிலாளர்முறை என்னும் கொடிய அவலத்தை முற்றாகத் துடைத்தெறிய முன்வர வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.