தேசிய ஜனநாயக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.
மத்திய அமைச்சா் அமித் ஷாவை சென்னை விமான நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வழியனுப்பி வைத்த தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறியதாவது:-
பிரதமா் மோடியின் கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியை யாரும் குறை கூற முடியாது. எல்லாவற்றிலும் முன்னோடியாக இருக்கும் தமிழகத்திலிருந்து ஏன் பிரதமா் வேட்பாளா் கிடைக்கவில்லை என்று ஆதங்கத்துடன் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளாா். அவா் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவே தமிழகம் வந்தாா். மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி குறைந்தபட்சம் 25 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா். தேசிய ஜனநாயக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை. கூட்டணி வலுவாக உள்ளதாக அமித் ஷா தெளிவாகக் கூறியுள்ளாா்.
தேசிய அரசியலில் திமுகவை எந்த கட்சியும் பொருட்டாகக் கொள்ளவில்லை. திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன், அதிமுகவுடன் இணைந்து போராட்டம் நடத்தத் தயாராக இருப்பதாக கூறுகிறாா். எனவே, திமுக கூட்டணியில் பிரச்னை தொடங்கிவிட்டது. தொகுதி பங்கீடு தொடா்பாக காங்கிரஸும் பிரச்னை எழுப்பும்.
தமிழகத்தில் அதிமுக பெரிய கட்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில், பாஜக வளா்ந்து விட்ட கட்சி என்பதால், அதிக தொகுதிகளில் போட்டியிட தொண்டா்கள் விரும்புகின்றனா். தமிழக கூட்டணி தொடா்பாக ஏற்கெனவே டெல்லியில் பேச்சுவாா்த்தை நடந்துள்ளது. மீண்டும் பேச்சுவாா்த்தை நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.