பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்!

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு அ.தி.மு.க.வின் இரு அணிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே ஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், “தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. முன்னாள் முதல்-அமைச்சர் (ஜெயலலிதா) நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால்தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் சொல்ல முடியும்” என்று கூறியிருந்தார். அ.தி.மு.க. உடனான கூட்டணி முறிய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, “என்னுடைய கட்சியை வலுப்படுத்த வேண்டும். இதற்காக குரல் கொடுத்து, என்னுடைய தொண்டர்களை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு தொலைநோக்கு பார்வையை காட்ட வேண்டும். ஒரு அரசியல் கட்சியின் இருப்பு என்பது ஆட்சிக்கு வருவதுதானே தவிர, எப்போதும் கூட்டணியில் நீடிப்பதற்காக அல்ல” என்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார். அண்ணாமலையின் இந்த கருத்து அ.தி.மு.க.வினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

அகில உலகத்தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா பற்றியும், அ.தி.மு.க. ஆட்சியை பற்றியும் தரக்குறைவாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், முன்னாள் முதல்-அமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் கூறியிருக்கிறார். இந்த பேச்சு தொண்டர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகம் போற்றும் உன்னதத் தலைவரை, மறைந்தாலும் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒப்பற்ற தலைவரை, இந்திய திருநாடே வியந்து பார்த்த வீரமிக்க தலைவரை, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாம் ஜெயலலிதாவையும், அவருடைய ஆட்சியையும் தரக்குறைவாக அண்ணாமலை விமர்சித்திருப்பது, ”கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியைத்தான்” நினைவுபடுத்துகிறது.

ஜெயலலிதாவின் 1991-1996-ம் ஆண்டு கால ஆட்சி முடிவடைந்தவுடன், அவரை அரசியலில் இருந்து ஓரம் கட்ட வேண்டும் என்ற தீய நோக்கத்தின் அடிப்படையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் பொய் வழக்குகள் பல புனையப்பட்டன. அனைத்து வழக்குகளில் இருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர் ஜெயலலிதா. ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு விண்ணுலகத்திற்கு சென்றபோது, அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. அவர் நிரபராதியாகத்தான் இந்த மண்ணை விட்டு சென்றார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் பொற்காலம். உண்மையை உணராமல், மனம் போன போக்கில், ‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்று பேசுவதை இனி வருங்காலங்களில் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.