குற்றவாளிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அண்ணாமலை பதவி கொடுப்பதாக அவருடைய கட்சியினரே விமர்சிக்கிறார்கள் என ராஜ்யசபா எம்பியும் அதிமுக முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் ஊழலை பொருத்தமட்டில் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சி காலம் மோசமானவை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதில் தமிழகத்தில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்துள்ளன. முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் என்று கூட சொல்வேன் என குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த பதில் அதிமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலைக்கு எதிராக கொந்தளித்துவிட்டனர். அந்த வகையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசுவதற்கு தராதரமும், யோக்கியதையும் அண்ணாமலைக்கு இல்லை. ஊழல் குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு தகுதியில்லை. குற்றவாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு பதவி கொடுக்கிறார் என அவர் மீது அவரது கட்சியினரே புகார் தெரிவித்துள்ளனர். மேலும் 40 சதவீத கமிஷன் ஆட்சி என்றால் அது பாஜகதான். கொலை, பலாத்காரம் வழக்கு குற்றவாளிகளுக்கெல்லாம் பணம் வாங்கி பாஜகவில் பதவி வழங்கி வருகிறார். எம்பியாகவோ எம்எல்ஏவாகவோ ஏன் கவுன்சிலராக கூட இதுவரை அண்ணாமலை வென்றதில்லை. அதிமுகவை பிடிக்காவிட்டால் அண்ணாமலை விலகிக் கொள்ளலாம். டெல்லியில் அண்ணாமலையை வைத்துக் கொண்டே எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர் அமித்ஷா கூறுகையில், அதிமுக தலைமையில்தான் கூட்டணி என தலையில் கொட்டுவது போல் அண்ணாமலையை வைத்துக் கொண்டே தெரிவித்தார். அப்போதே அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என சொல்லியிருக்கலாமே!
மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. திமுகவின் பி டீமாக அண்ணாமலை செயல்படுகிறார். கட்சி தலைமை சொல்வதை கேட்காமல் இவர் தனி பாதையில் செல்வதை பார்த்தால் அண்ணாமலை வேறு, பாஜக வேறு என தோன்றுகிறது. தனி அஜெண்டாவோடு அண்ணாமலை செயல்படுகிறார். அதிமுகவை பிடிக்காவிட்டால் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என சி.வி.சண்முகம் மிகவும் காட்டாமாக தெரிவித்தார். மேலும் அதான் உங்களுக்கு அதிமுகவை பிடிக்கலையே போக வேண்டியதுதானே. யாரு இழுத்து புடிச்சா, ஏன் எங்களை புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க. ஊழலுக்காக கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது பாஜக ஆட்சியில்தான். ஊழல் குறித்து பேச அண்ணாமலைக்கும் பாஜகவுக்கும் அருகதை இல்லை என விமர்சித்தார்.