மருத்துவக் கல்லூரிகளில் பொது கலந்தாய்வு என்பது தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவ படிப்பு பறிபோகும் அளவுக்கு பேராபத்துமிக்கது என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளதாவது:-
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி இடங்களை தேசிய மருத்துவ ஆணையம் நேரடியாக கலந்தாய்வு செய்வது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கை, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாகும். மாணவர்கள் நலன் என்ற பெயரிலும், மருத்துவப் படிப்பில் முறைகேடுகளை களைவது என்ற பெயரிலும் தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பட்டப் படிப்புக்கு நேரடியாக ஒன்றிய அரசு கலந்தாய்வு செய்வது மாநில உரிமையை பறிக்கும் செயலாகும்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதமான இடஒதுக்கீடும், அவர்களுக்கு அரசே கட்டணம் செலுத்தும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசே நேரடியாக கலந்தாய்வு நடத்துவதன் மூலம் இந்த உரிமை தட்டி பறிக்கப்படும். இதேபோன்று, தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் மூலம் சேரும் 7.5 சதமான மாணவர்களுக்கு கட்டணத்தை அரசே செலுத்தும் நிலைமை உள்ளது. இந்த உரிமையும் பறிபோகும். ஏற்கனவே, இளநிலை மருத்துவப் படிப்பில் 15 விழுக்காடு இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 விழுக்காடு இடங்களும் ஒன்றிய அரசின் மூலமே கலந்தாய்வு செய்யப்படுகிறது. இவை தவிர, மீதமுள்ள அனைத்து இடங்களுக்கும் மாநில மருத்துவக் கல்வி இயக்ககம் கலந்தாய்வு செய்யப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய ஒன்றிய அரசின் முடிவின்படி 100 விழுக்காடு இடங்களையும் ஒன்றிய அரசின் கலந்தாய்வுக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் மாநில அரசின் உரிமை முழுக்கப் பறிக்கப்படுகிறது.
இந்திய ஒன்றியத்தில், அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப ஒதுக்கீடு கொள்கை அமலாக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பட்டியலின பழங்குடியினருக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அமலாக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ஒரே கலந்தாய்வு செய்வதன் மூலம் இந்த இட ஒதுக்கீடு முறையாக செயல்படுத்த முடியாது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 50 விழுக்காடு கலந்தாய்வை தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்தும் வாய்ப்பு பறிக்கப்பட்டு விடும். இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தப்படும் போது தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ படிப்பு பெரும் பாதிப்புக்குள்ளாகும்.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 70க்கும் மேல் உள்ளன. இவைகளில் ஒட்டுமொத்தமாக 12025 இடங்கள் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் பொது கலந்தாய்வினை ஏற்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள சூழ்நிலையில், தற்போது மீண்டும் பொது கலந்தாய்வை உறுதி செய்து தேசிய மருத்துவக் கல்வி ஆணையம் உத்தரவிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். எனவே, மாநில அரசின் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் மூலமே தொடர்ந்து மருத்துவ கலந்தாய்வு நடத்திட ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.