தேர்தல் நெருங்க நெருங்க மத்திய அரசு இதுபோன்று பல வேலைகளை செய்யும், என்னை பிடிக்கவில்லை என்றால் நாளை என் வீட்டில் சோதனை வரும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது எழுந்த ஊழல் புகார் தொடர்பாக அமலாக்கத்துறை நேற்று ரெய்டு மேற்கொண்டு, செந்தில் பாலாஜியை கைது செய்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக நெஞ்சுவலியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சீமான் கூறியதாவது:-
தம்பி செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி எனச் சொல்கிறார்கள். அவர் குணமாகி வரவேண்டும் என நான் வாழ்த்துகிறேன். இவ்வளவுதான் சொல்ல முடியும். தமிழ்நாட்டில் சுவர் ஏறி குதித்து கைது செய்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது. அதிகாரத்தில் யார் வந்தாலும் அவர்களின் வசதிபடிதான் நடந்து கொள்வார்கள். அ.தி.மு.க ஆட்சி இருக்கும்போது கருணாநிதியை எப்படி கைது செய்தது? ப.சிதம்பரத்தை வீடு ஏறி குதித்து கைது செய்தது எல்லாம் இருக்கிறது. கைது என்றவுடன் நெஞ்சுவலி வருவது எல்லாம் நாம் நிறைய தெலுங்கு படங்களில் பார்த்திருக்கிறோம். சாதாரணமா கைது பண்ணினால் நெஞ்சுவலி என்றால் ஒவ்வொரு கைதிக்கும் நெஞ்சுவலிதான் வரவேண்டும்.
தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் நிறைய வேலைகளை மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் செய்வார்கள். இது போன்று போய் நிறுத்துவார்கள் என்பது நமக்கு தெரிந்ததுதான், எதிர்பார்த்ததுதான். இது ஜனநாயக நாடு, மக்களாட்சி கோட்பாட்டை கொண்ட ஒரு நாடு, அதிகாரம் மக்கள் கையில் இருக்கிறது என்று நாம் நினைத்தோம். அப்படித்தான் கட்டமைத்தோம். தேர்தல் ஆணையம், நீதிமன்றம், வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை எல்லாம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகள் என நினைத்தோம். அதிகாரம் தலையிடாது, சுதந்திரமாக இயங்கும் என நினைத்தோம். இப்போது அதெல்லாம் கிடையாது. இவை அனைத்தும் ஆட்சியில் இருப்பவர்களின் ஐந்து விரல்கள். அது நீட்டினால் நீட்டும், மடக்கினால் மடங்கும். என்னை பிடிக்கவில்லை என்றால் நாளை என் வீட்டில் சோதனை வரும். ஏன் கைது பண்ணினார்கள், எதற்காக கைது பண்ணினார்கள் என வீட்டில்கூட சொல்லவேண்டியது இல்லை. இருட்டறையில் போட்டு சாகடிப்பதால்தான், சர்வாதிகாரம் எனச் சொல்லாமல் கொடுங்கோன்மை ஆட்சி என இதைச் சொல்லுவேன்.
பழிவாங்கும் நடவடிக்கை என தி.மு.க சொல்கிறது என்றால், இந்த காரணத்துக்காக பழிவாங்குகிறது என சொல்லவேண்டும். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் இந்த ஊழலை செய்தார்கள் என்றால் இவ்வளவு காலம் அமலாக்கத்துறை என்ன செய்தது? தகவல் தெரிந்ததும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதிமுக ஆட்சி முடிந்துபோய் எவ்வளவு காலம் ஆகிவிட்டது. அதிலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் இவர் அமைச்சராக இல்லை. இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றால் தேர்தல் ஸ்டண்ட் எனச்சொல்லாமல் வேறு என்னவென்று நினைப்பது? மிரட்டி பணிய வைப்பார்கள். அவர்கள் கூட்டணிக்கு போவார்கள், போகவில்லை அதுவேறு. ஆனால் அவர்கள் அச்சுறுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.