நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது: அரவிந்த் கெஜ்ரிவால்

கைது நடவடிக்கைகளின் மூலம் பாஜகவால் தமிழ்நாட்டில் ஒரு சீட்டு கூட வாங்க முடியாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சருக்கு இதயத்தில் 3 அடைப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்யவும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் பெயரை பாஜக படை என மாற்ற வேண்டும். முன்பெல்லாம் இந்த அமைப்புகளுக்கு நல்ல மரியாதை இருந்தது. அவர்கள் சோதனை செய்யும்போதோ அல்லது கைது செய்யும்போதோ, தவறு நடந்திருக்கும் என்று தோன்றியது. ஆனால், தற்போது இந்த அமைப்புகள் பாஜகவின் அரசியல் ஆயுதங்களாக மாறிவிட்டன.

அமித்ஷா தமிழ்நாடு வந்து சென்ற 2 நாட்களில் செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை குறிவைத்து விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. டெல்லி துணை முதல்வர் சிசோடியா (ஆம் ஆத்மி) கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மத்திய அமைப்புகளைக் கொண்டு எதிர்க்கட்சிகளை பாஜக மிரட்டப் பார்க்கிறது. சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பாஜக பயன்படுத்துகிறது.

அமலாக்கத்துறை, சிபிஐ சோதனை மூலமாக நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகளை பெறலாம் என நினைப்பது முட்டாள் தனமானது. கைது நடவடிக்கையால் சில சீட்டுகள் கிடைக்கும் என பாஜக நம்புவது தவறு. கைது நடவடிக்கைகள் மூலம் பாஜகவால் தமிழ்நாட்டில் ஒரு சீட்டு கூட வாங்க முடியாது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை மூலம் நாட்டின் ஜனநாயகத்துக்கு பாஜக கேடு விளைவிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.