இது போன்ற பல சோதனைகளை திமுக பார்த்துள்ளது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது. இன்று அதிகாலை சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஒமந்தூரர் மருத்துவமனைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். தொடர்ந்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், “அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியுவி ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி சுயநினைவில் இல்லை. அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்தி இருக்க வாய்ப்பு இருக்கு. நான்கு ஐந்து முறை பெயர் சொல்லி அழைத்தபோதும் அவர் கண் திறந்து பார்க்கவில்லை. அவர் காது அருகே வீக்கம் உள்ளது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது; இந்த சலசலப்புக்கெல்லாம் எல்லாம் திமுக அஞ்சாது; இது போன்ற பல சோதனைகளை திமுக பார்த்துள்ளது; பயம் கிடையாது” என்று கூறினார்.