செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தனது கடமையை செய்துள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தனது கடமையை செய்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது பணி நியமனத்திற்காக பணம் வாங்கினார் என்பது செந்தில் பாலாஜி மீதான புகார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை அடுத்து செந்தில் பாலாஜி தொடர்புடைய அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதனையடுத்து நள்ளிரவில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்படவே ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் உள்ளிட்ட பலரும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதால் பயத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.

இது புது வழக்கு அல்ல பழைய வழக்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படியே அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார். உரிமம் இல்லாத பார்கள் மூலம் பல கோடி ரூபாய் பணம் கொள்ளையடித்து முறைகேடு நடந்துள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். செந்தில் பாலாஜி ஊழல் செய்துள்ளார். அந்த ஆதாரத்தின் அடிப்படையில்தான் சோதனை நடத்தியுள்ளனர். எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின் என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும் போது அவர் ஒரு பெண் அதிகாரி என்றும் கூட பார்க்காமல் தாக்குதல் நடத்தினர். இது இந்தியாவிலேயே எங்கும் நடைபெறாது. நேற்றைய தினம் வாக்கிங் போனவர் நன்றாகத்தான் இருந்தார். விசாரணையை முழுமையாக சந்திப்பேன் என்று சொன்னார். அதை விட்டு விட்டு ஏன் இத்தனை ஆர்பாட்டம் செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

செந்தில் பாலாஜி மீதுள்ள அக்கறையில் போய் யாரும் பார்க்கவில்லை. அவர் எதையாவது சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் போய் பார்த்திருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். செந்தில் பாலாஜி நாடகம் நடத்தினாலும் அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தார்மீக பொறுப்பேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.