அமைச்சர் செந்தில் பாலாஜி செய்த முறைகேடுகளை கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க சொன்னதே முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை கூறியதாவது:-
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்ததை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி எனவும் முதல்வர் ஸ்டாலினும், திமுகவினரும் கூறி வருகின்றனர். இது எந்த விதத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது புரியவில்லை. இன்றோ நேற்றோ செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. பல ஆண்டுகளாக இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில்தான் தற்போது கூட செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அத்தனைக்கும், செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு என்பது திமுக ஆட்சிக்காலத்தில் சுமத்தப்பட்டது அல்ல. அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேட்டுக்காகவே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தற்போது செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக பேசும் நமது முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது இதே வழக்கு தொடர்பாக என்னென்ன பேசினார்? செந்தில் பாலாஜியை ஊழல் பேர்வழி என்றும், அவரும் அவரது தம்பியும் சேர்ந்து எப்படியெல்லாம் லஞ்சம் வாங்கி கொழிக்கிறார்கள் என்பதை பற்றியும் முதல்வர் ஸ்டாலின் அப்போது மிக கம்பீரமாக பேசினார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவரே ஸ்டாலின் தான். அப்போது அவ்வாறு கூறிவிட்டு, இப்போது நடவடிக்கை எடுத்ததும் பாஜக மீது ஏன் அவர் பழிசுமத்துகிறார்?
அதேபோல, அதிமுக ஆட்சிக்காலத்தில் தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஸ்டாலின் கூறிய வார்த்தைகளை நான் நினைவுப்படுத்துகிறேன். “வருமான வரித்துறை என்பது மத்தி அரசுக்கு கீழ் இருந்தாலும், அதற்கென தனி அதிகாரம், தனி சட்டம் இருக்கிறது. தலைமைச் செயலத்திலும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதால்தான் இந்த சோதனை நடைபெறுகிறது” என சொன்னவர்தானே ஸ்டாலின்.
அன்றைக்கு ஸ்டாலின் சொன்னதையே தான் இப்போது நாங்கள் அவருக்கு நியாபகப்படுத்துகிறோம். அமலாக்கத்துறை மத்திய அரசுக்கு கீழ் அமைந்திருந்தாலும் அதற்கென தனி அதிகாரிகள், தனி சட்டம் இருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் அதற்கான ஆதாரம் இருப்பதாலேயே இந்த சோதனை நடைபெறுகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.