அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலிக்கு ஏற்பட்ட நிலையில் நள்ளிரவில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது:-
சட்டவிரோத பார்கள் மூலம் கடந்த இரு ஆண்டுகளில் 20,000 கோடி ரூபாய்க்கும் மேல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மதுபான ஆலைகளில் இருந்து டாஸ்மாக் மூலம் சில்லறை கடைகளுக்கு வர வேண்டும். ஆனால் ஆலைகளிலிருந்து நேரடியாக பார்களுக்கு கொண்டு செல்லப்படுவதால் கோடிக்கணக்கான அரசு பணம் கஜானாவுக்கு வராமல் ஒரு குடும்பத்துக்கு மட்டுமே செல்லும் சூழல் நிலவுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கையை தடுப்பது சரி அல்ல. அமலாக்கத்துறை சோதனைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறிய செந்தில் பாலாஜிக்கு கைதாவதில் என்ன பிரச்சினை உள்ளது? அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை உடனடியாக முதலமைச்சர் நீக்க வேண்டும். அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நபரை அமைச்சர்கள் சந்திப்பது விதிமுறை மீறல். எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்து வந்து செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்ய வேண்டும். அமலாக்கத்துறை வசம் இருக்கும் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் சந்திப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. செந்தில் பாலாஜி மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.