அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு: பைபாஸ் சர்ஜரிக்கு பரிந்துரை!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்களின் பரிந்துரைபடி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக சிலரை ஏமாற்றி பணம் பெற்றதாக அவர் மீது மோசடி புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டதால் சமாதானமாக போவதாக செந்தில் பாலாஜியுடன் வழக்கு தொடரப்பட்ட 4 பேரில் ஒருவரான சண்முகம் தெரிவித்தார். இதையேற்ற உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தக் கூடாது என உத்தரவிட்டது. இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் வழக்கு தொடர்ந்தனர். அதில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த தடை விதிக்கப்பட்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு சொந்தமான சென்னை, கரூர் வீடுகளில் சோதனை நடந்தது. 17 மணி நேர சோதனைக்கு பிறகு செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அவரை கைது செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை உறவினர்கள், நண்பர்கள் யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை என எம்பி இளங்கோ தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில் உயர் ரத்த அழுத்தம், நெஞ்சுவலி காரணமாகவே செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் இதய துடிப்பை கண்காணிக்கும் இசிஜி மருத்துவ அறிக்கை நார்மலாக இல்லை. காலை 9 மணிக்கு பிறகே செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து தெரிவிக்க முடியும். செந்தில் பாலாஜி மயக்கத்தில்தான் இருக்கிறார். செந்தில் பாலாஜியின் இதயத் துடிப்பும் ஆக்ஸிஜன் அளவும் கண்காணிக்கப்படுகிறது. 2 முதல் 3 நாட்கள் வரை செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் 6ஆவது தளத்தில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதய துடிப்பு சீராக இல்லாமல் இருந்தது. எனினும் அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவருக்கு மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் இதயத்தில் ரத்த குழாய்களில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய மருத்துவர்கள் அவரை பரிசோதனை அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த சோதனையின் முடிவுகள் வெளியான நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். பொதுவாக பெரிய அறுவை சிகிச்சை செய்ய நோயாளியின் ரத்த சொந்தங்களோ நெருங்கிய உறவினர்களோ கையெழுத்திட வேண்டும். அந்த வகையில் அமைச்சரின் மனைவி மேகலா கரூரில் இருந்து சென்னை வந்துவிட்டார். அவரிடம் அமைச்சரின் உடல்நிலை குறித்து பேசிய மருத்துவர்கள் கையெழுத்து பெற்றுக் கொண்டனர். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய இஎஸ்ஐ மருத்துவக் குழு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களிடம் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகள் காட்டப்பட்டன. இதையடுத்து அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய இஎஸ்ஐ மருத்துவக் குழுவினர் ஒப்புதல் அளித்தனர்.