சிபிஐயின் அடுத்த குறி முதல்வர் ஸ்டாலின் என்று கூறி ரூ 200 கோடி விவகாரத்தை அண்ணாமலை கிளப்பி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது அதிமுக ஆட்சியில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடரப்பட்டது. செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் தற்போது தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நேற்று முன் தினம் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அதில் அவருடைய வீட்டில் 17 மணி நேர சோதனைக்கு பிறகு அவரை கைது செய்வதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறினார். உடனே அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஆஞ்சியோ கிராம் செய்ததில் செந்தில் பாலாஜி இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக அறிக்கை வந்துள்ளது. இதனால் அவருக்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவமனை பரிந்துரைத்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்த நீதிபதி அல்லி, அவருக்கு 28 ஆம்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்றக் காவலில் இருப்பதால் அவருக்கு புழல் சிறைத் துறையினர் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய புலனாய்வுத் துறை அளிக்கப்பட்டிருந்த அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற்றது. தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மாநில அரசின் முன் அனுமதியை பெறுவது அவசியம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ எந்த மாநிலங்களில் விசாரணை நடத்துவதாக இருந்தால் அதற்கு அந்தந்த மாநில அரசுகளின் முன் அனுமதி பெற வேண்டும் என 1946 டெல்லி சிறப்பு காவல் அமைப்பு சட்டம் பிரிவு 6-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1989,1992ம் ஆண்டில் இந்த சட்டப்பிரிவின் கீழ் சில வகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டு இருந்த பொதுவான அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற ஆணையிடப்பட்டுள்ளது. இனி புலனாய்வு அமைப்பு தமிழ்நாட்டில் விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக தமிழ்நாடு அரசின் முன் அனுமதியை பெற்று விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற ஆணையை மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முந்தைய திமுக ஆட்சியின் போது மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தத்திற்காக ரூ 200 கோடி பெற்றுக் கொண்டார் என தமிழக பாஜக கடந்த ஏப்ரல் மாதம் குற்றம்சாட்டியிருந்தது. இன்று தமிழக அரசின் அனுமதியில்லாமல் சிபிஐ விசாரணை நடத்த முடியாது என ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதை பார்க்கும் போது சிபிஐ விரைவில் தனது வீட்டிற்கு விசாரணைக்கு வரும் என அச்சத்தில் தமிழக முதல்வர் இருப்பதை போல் தெரிகிறது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அரியலூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அண்ணாமலை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்ட பா. ஜ. க. சார்பில் ஜெயங்கொண்டத்தில் நேற்று பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அடுத்தது போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தான் எனத் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை பேசியதாவது:-
செந்தில் பாலாஜி கைது திமுகவிற்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூனியராக யார் இருப்பார் என நான் ஆராய்ச்சி செய்து பார்த்தேன். குட்டி செந்தில் பாலாஜி யார் என்றால் இந்த மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தான். அரியலூர் மாவட்டத்தின் திமுக செயலாளர். செந்தில் பாலாஜி பணம் வாங்கிக்கொண்டு வேலை கொடுப்பார். Cash for Job Scam. சிவங்கர் பணம் வாங்கிக்கொண்டு டிரான்ஸ்பர் கொடுப்பார். Cash for Transfer Scam. அடுத்த திமுக ஃபைல்ஸில் அண்ணன் சிவசங்கர் இருக்கிறார். சமீபத்தில் நடந்த 36 பணிமாறுதல்களுக்கு ரூ.12 கோடி பணம் வாங்கியுள்ளார். வழக்கம்போல என் மீது ஒரு வழக்கை போடுவார்கள். சிவசங்கர் என் மீது ஒரு வழக்கை எடுத்து வருவார். மான நஷ்ட வழக்கு போடுவார்கள். அதை மானம் இருப்பவர்கள் போடலாம், நீங்க எதுக்கு போடுறீங்க? நீங்கள் யாரிடம் பணம் வாங்கி இருக்கிறீர்கள் என்று சொல்கிறேன். செந்தில் பாலாஜி 8 அடி தாண்டினால் அவரது சிஷ்யர் நான் 16 அடி தாண்டுவேன் என்று நிற்கிறார் சிவசங்கர். அவருடைய ஏஜெண்ட், லஞ்ச ஒழிப்புத்துறையால் தேடப்படும் குற்றவாளி. சிவசங்கர் வீட்டுக்குச் சென்றால் அவரது பக்கத்திலேயே அமர்ந்திருப்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.