மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரிசியை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்

மத்தியத் தொகுப்பிலிருந்து வெளிச்சந்தை விற்பனை முறையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரிசியை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மத்திய அரசுக்கு சொந்தமான மத்தியத் தொகுப்பில் உள்ள அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மலிவு விலையில் மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றன. இது தவிர மாநிலங்களுக்கு கூடுதலாகத் தேவைப்படும் உணவு தானியங்கள் வெளிச்சந்தை விற்பனை முறையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின்படி ஒரு கிலோ அரிசி ரூ.3க்கு விற்பனை செய்யப்பட்டால் வெளிச்சந்தை விற்பனை முறையில் ஒரு கிலோ அரிசி ரூ.34க்கு விற்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் வெளிச்சந்தையில் கடந்த சில வாரங்களாக அரிசி மற்றும் கோதுமை விலை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், வெளிச்சந்தை விற்பனை முறையில் தனியாருக்கு அதிக அளவில் அரிசி மற்றும் கோதுமையை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அதை ஈடு செய்ய மாநிலங்களுக்கு அரிசி மற்றும் கோதுமை வழங்குவதை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. வெளிச்சந்தையில் அரிசி விலையை குறைக்க வேண்டும் என்பதற்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் அரிசியை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசின் முடிவு நல்ல நோக்கம் கொண்டதாக இருக்கலாம், ஆனால், இதனால் எந்த பயனும் ஏற்படாது. எனவே, மத்தியத் தொகுப்பிலிருந்து வெளிச்சந்தை விற்பனை முறையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரிசியை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்திய உணவுக்கழகத்திடம் உள்ள அரிசி மற்றும் கோதுமையை மாநில அரசுகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தாராளமாக வழங்கி, வெளிச்சந்தையில் அதன் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.