அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜிக்கு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று செந்தில் பாலாஜியை சந்திக்க அமைச்சர் சேகர்பாபு சென்ற நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவரது தம்பி அசோக், உறவினர்கள், நண்பர்கள், தொழிலதிபர்கள், நெருங்கிய ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் சமீபத்தில் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையை தொடர்ந்து நேற்று முன்தினம் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. 17 மணிநேர சோதனைக்கு பிறகு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறி கதறி அழுதார். இதையடுத்து அவர் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. அதோடு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் உள்பட நிர்வாகிகள் செந்தில் பாலாஜியை நேற்று சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் தான் இன்று அமைச்சர் சேகர்பாபு செந்தில் பாலாஜியை சந்திக்க ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் சந்தித்த நிலையில் இன்று சேகர்பாபுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் தான் முக்கிய விஷயம் உள்ளது. நேற்று செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் கூட அவர் நீதிமன்றத்திலோ, நீதிபதி முன்போ ஆஜர்படுத்தப்படவில்லை. ஆனால் நேற்று மாலையில் அமலாக்கத்துறையினர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லியை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவர் செந்தில் பாலாஜியிடம் விசாரித்தார். அதன்பிறகு 15 நாட்கள் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பொதுவாக வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு நீதிமன்ற காவல் என்றால் அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட வேண்டும். ஆனால் செந்தில் பாலாஜிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் அவர் போலீஸ் பாதுகாப்பில் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். இதனால் செந்தில் பாலாஜியை சந்திக்க வரும் நபர்கள் கட்டாயமாக சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியை பெற வேண்டும். ஆனால் சேகர்பாபு அப்படி எந்த அனுமதியையும் பெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் அவருக்கு செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.
இதுபற்றி அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ‛‛நீதிமன்றக் காவலில் இருப்பதால் செந்தில்பாலாஜியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் மருத்துவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தேன். உடனடியாக செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். அவரது உறவினர்களை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தோம்” என்றார்.