செந்தில் பாலாஜி உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்: எச்.ராஜா

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதின் ரத்தக் குழாய்களில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக செந்தில் பாலாஜிக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை பரிந்துரை செய்துள்ளது. இ எஸ் ஐ மருத்துவர்கள் குழுவும் பைபாஸ் சர்ஜரி செய்ய பரிந்துரை செய்தது. அதேசமயம் செந்தில் பாலாஜியை 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலை, காதுகளில் காயங்கள் உள்ளன என்று மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தும் தான் துன்புறுத்தப்பட்டதாகவும், கீழே தள்ளி அமலாக்கத்துறையினர் தன்னை துன்புறுத்தியதாகவும் செந்தில் பாலாஜி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தி.மு.க.வினர் ஒரு நாடகத்தை நடத்தி வருகின்றனர். மக்களிடம் அனுதாபம் பெறலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக பேசினால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று இவர்கள் நினைக்கின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கு முன்பு வரை வராத நெஞ்சுவலி அதற்கு பின்னர் எப்படி வந்தது? திடீரென ஒரு நாள் இரவு எப்படி அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இதற்கு உயர்தர டாக்டர்கள் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அமலாக்கத்துறை கைது செய்ததால் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது நமது கடமையாகும். இதற்கு முன்பு பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் வந்ததில்லை. எனவே, நாடகத்தை அரங்கேற்றுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் அமைச்சர் 100 நாளுக்கு மேல் சிறையில் இருந்தால், அதனால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த வளர்ச்சியும் கிடைக்கவில்லை. யாருக்கும் அனுதாபம் வராது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடலாம். இவ்வாறு அவர் கூறினார்.