கைது நடவடிக்கைக்கு ஆம்பள அழலாமா என்று கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தன் மீது தவறில்லை என்றால் செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியதுதானே எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஸ்கர் விருதுக்கு தகுதியானவர் என்றும் உலக மகா நடிப்புடா சாமி என்பதை போல் அவரது நடிப்பு இருந்ததாகவும் விமர்சித்துள்ளார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செந்தில்பாலாஜி உடல்நிலை விவகாரத்தில் உள்ளது உள்ளபடி அறிக்கை கொடுக்க வேண்டும் என்றும் ரெக்கார்டுகள் எங்கேயும் போய்விடாது என்பதால் தவறு செய்தவர்கள் ஆட்சி மாறிய பிறகு ஜெயிலுக்கு போவது உறுதி எனவும் தெரிவித்தார். இதனை மருத்துவர்களை மிரட்டுவதற்காக கூறவில்லை என்றும், உண்மை நிலையை ஆட்சிக்கு அடிபணியாமல் சொல்லுமாறு தான் தாங்கள் கேட்பதாக தெரிவித்தார்.
பொதுவாகவே 30 வயதை கடந்தவர்களுக்கு 30% அடைப்பு இருப்பது இயல்பானது என்றும் 80%க்கு மேல் அடைப்பு இருந்தால் தான் அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள் என்றும் ஆனால் உலகில் காணாத காட்சியாக ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் மட்டுமே இப்படியொரு பரிந்துரை கொடுத்திருப்பதாக ஜெயக்குமார் விமர்சித்தார்.
செந்தில்பாலாஜி கைதை டாஸ்மாக் ஊழியர்கள் கொண்டாடுவதாகவும் அந்தளவுக்கு பாட்டிலுக்கு ரூ.10 அதிகம் வசூலிக்க வற்புறுத்தி வந்ததாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார். செந்தில்பாலாஜி ஐசியூவில் இருக்கிறார் என்கிறார்கள், ஆனால் மானிட்டர் ஓடவில்லை, ஆக்சிஜன் கொடுக்கப்படவில்லை மாறாக இவர் ஃபேஸ் மாஸ்க் அணிந்திருக்கிறார் என்றும் அமைச்சர்கள் மட்டும் ஐசியூவிற்கு எப்படி செல்ல முடிகிறது எனவும் வினவினார்.