முதல்வர் மு.க ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மீண்டும் மறுப்பு!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்ற முதல்வர் மு.க ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நிலையில் அவர் நிர்வகித்து வந்த இலாகாக்களான மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆகியவற்றை கவனிப்பதற்காக அவற்றை வேறு அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து முதல்வர் முடிவு செய்தார். இது குறித்த பரிந்துரையை ஆளுநருக்கு முதல்வர் அனுப்பி வைத்தார். அதில், மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் அளிப்பதாக அந்த பரிந்துரையில் முதல்வர் குறிப்பிட்டு இருந்தார். இந்த பரிந்துரையை ஆளுநர் ஏற்று உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்த ஆளுநர் சில விளக்கங்களை கேட்டு திருப்பி அனுப்பினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், மருத்துவக் காரணங்களால் இலாகாக்களை மாறுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அந்தக் காரணம் தவறானது, அவரை கைது செய்திருக்கிறார்கள், அதனை குறிப்பிடாததால் இந்த பரிந்துரையை ஏற்க இயலாது என ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநரின் இந்தச் செயல்பாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

இந்த நிலயில் தமிழக அரசு மீண்டும் அனுப்பி வைத்த பரிந்துரையை ஏற்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்துள்ளர். செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகளை பிற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கும் பரிந்துரைக்கு ஏற்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்பதை ஏற்க மறுத்துள்ளார். குற்றவியல் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். ஆளுநரின் செயல்பாடு அரசியல் அமைப்பை மீறும் செயல் என்று எதிர்க்கட்சிகள் ஏற்கனவே விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் தற்போதை ஆளுநர் மீண்டும் திருப்பி அனுபியது அரசியல் வட்டாரத்தில் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.