பிபர்ஜாய் புயலால் குஜராத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே பிபா்ஜாய் புயல் வியாழக்கிழமை இரவில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் பலத்த மழையும் பெய்தது. புயலின் தாக்கத்தால், கட்ச்-செளராஷ்டிரா பகுதியில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் மீட்பு-நிவாரண நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா்.
இந்த நிலையில் குஜராத்தில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். கட்ச் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரையும் அவர் சந்தித்து பேசினார். முன்னதாக மாணட்வியில் உள்ள மாண்ட்வி சிவில் மருத்துவமனையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களையும் கத்தா கிராம மக்களையும் அமித்ஷா சந்தித்தார். அப்போது குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உடனிருந்தார்.
புயல் பாதிப்புகள் குறித்து குஜராத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிபர்ஜாய் புயல் காரணமாக ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. புயலின் போது உயிர்களைப் பாதுகாக்க குஜராத் அரசும், மத்திய அமைப்புகளும் பணியாற்றிய விதம் குழுப்பணிக்கு சிறந்த எடுத்துக்காட்டு. புயலுக்கு சுமார் 47 பேர் காயமடைந்துள்ளனர், ஆனால் அவர்களில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. சூறாவளியின் போது சுமார் 234 விலங்குகள் இறந்தன. புயல் கரையை கடக்கும் முன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டார். தயார்நிலை குறித்து மாநில அரசு மற்றும் நிறுவனங்களுடன் பிரதமரே கலந்துரையாடினார்.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட 3,400 கிராமங்களில் 1,600 கிராமங்களில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. சூறாவளி காரணமாக சுமார் 1.08 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் 73,000 விலங்குகள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை, போலீஸ் மற்றும் பிஎஸ்எஃப் ஆகியவை பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து பணியாற்றின. இவ்வாறு அவர் கூறினார்.