குஜராத் கலவர வழக்கில் 35 பேர் விடுதலை!

குஜராத் கலவர வழக்கில் 35 பேரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி, குஜராத் மாநிலம் கோத்ரா ரெயில் நிலையத்தில் ரெயில் எரிக்கப்பட்டு ராம பக்தர்கள் 58 பேர் பலியானார்கள். அதைத்தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் வெடித்தது. பிப்ரவரி 28-ந் தேதி, கலோல் பஸ் நிலையம், தெலோல் கிராமம், தெரோல் நிலையம் ஆகிய இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. அவற்றில், 3 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக 52 பேர் கைது செய்யப்பட்டனர். பல ஆண்டுகளாக நடந்த விசாரணையின்போது, 17 பேர் மரணம் அடைந்தனர். எனவே, மீதியுள்ள 35 பேர் மீது பஞ்ச்மகால் மாவட்டம் ஹலோல் நகரில் உள்ள கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. நீதிபதி ஹர்ஷ் திரிவேதி தீர்ப்பு அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட 35 பேரையும் அவர் விடுதலை செய்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. ஒவ்வொரு வன்முறை சம்பவத்திலும் 2 ஆயிரம் பேருக்கு குறையாமல் திரண்டுள்ளனர். அதாவது, தன்னெழுச்சியாக வன்முறை நடந்துள்ளது. எனவே, திட்டமிட்ட வன்முறை என்று கூறுவதை ஏற்க முடியாது. எந்த நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வது கோா்ட்டின் பொறுப்பு. எனவே, 35 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.