இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக இருக்கும் என்று தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து கோவையில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களின் கண்டனப் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான திமுகவினர் பெருந்திரளாகப் பங்கேற்றனர். கோவை பொதுக் கூட்டத்தில், , தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இடதுசாரி தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கே.எம்.காதர்மொகிதீன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேற்றைய கூட்டம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. இன்று(நேற்று) கோயம்புத்தூரில் நாம் வெளிப்படுத்திய ஒற்றுமையும் உறுதிப்பாடும் எங்கும் பரவி, பொய்க் கதைகளால் பா.ஜ.க. உருவாக்கி வைத்திருக்கும் தோற்கடிக்க முடியாத பிம்பத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்யும்.
வரும் பொதுத்தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதை பா.ஜ.க. உணர்ந்துவிட்டது. எதிர்க்கட்சியினரை அரசியல்ரீதியாக எதிர்ப்பதற்குப் பதிலாக, தங்களுடைய தோல்விகளை மறைக்கக் கோழைத்தனமான, திமிர்த்தனமான நடவடிக்கைகளில் பா.ஜ.க. இறங்கியுள்ளது. இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.