ஆண்டுக்கு ஒரு லட்சம் அரசு பணியிடங்களை தமிழ்நாடு அரசு நிரப்ப வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தி அரசுத் துறைகளில் காலியாக உள்ளப் பணியிடங்களை ஒவ்வொரு ஆண்டும் நிரப்பி வருகிறது. முந்தைய அதிமுக அரசு 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் சராசரியாக 10000 பணியிடங்கள் என்ற அளவில் பணியிடங்களை நிரப்பி வந்தது. அதுமட்டுமின்றி, கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் எவ்வித அரசுத்தேர்வும் நடைபெறவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் ஓய்வு பெற்றோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களும் தற்போது 3.5 இலட்சம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பினை இழந்த இளைஞர்கள் பலரும் அரசுப் பணியில் சேர முயன்று வருவதால் போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் மூன்றரை இலட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் அதிக காலிப்பணியிடங்களுக்குப் போட்டித் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாட்டு இளைஞர்கள் எதிர்பார்த்த நிலையில், இரண்டாண்டு கொரோனா இடைவெளிக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் வெறும் 10000 பணியிடங்களுக்கு மட்டுமே ஆட்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 ஆயிரம் நான்காம் தொகுதி பணியாளர்கள் அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். காலியாகும் பணிகளை நிரப்ப வேண்டும் என்றாலும் கூட, ஆண்டுக்கு 10,000 நான்காம் தொகுதி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், 2012-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 10,718, 2017-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,351, 2019-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,398 என கடந்த 11 ஆண்டுகளில் 29,951 நான்காம் தொகுதி பணியாளர்கள் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 3 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்கள் தான் கடந்த 11 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, சராசரியாக ஆண்டுக்கு 2,722 நான்காம் தொகுதி பணியாளர்கள் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 11 ஆண்டுகளில் 1.10 லட்சம் நான்காம் தொகுதி பணியாளர்களை தேந்தெடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, 30 ஆயிரத்துக்கும் குறைவான பணியாளர்களையே தேர்ந்தெடுத்திருக்கிறது. அப்படியானால், காலியிடங்களை நிரப்புவதாக இருந்தால் கூட, இந்த முறை குறைந்தது 80,000 நான்காம் தொகுதி பணியாளர்களை தமிழ்நாடு அரசு தேர்வு செய்ய வேண்டும். ஆனால், கடந்த 30.03.2022 ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி 7,301 நான்காம் தொகுதி பணியாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் 21.03.2023 ஆம் நாளிட்ட அறிவிப்பின்படி இந்த எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் இத்தகையை அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் மூன்றரை லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. நடப்பு திமுக அரசின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாக இந்தக் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால், ஆண்டுக்கு ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மாறாக ஒவ்வொரு ஆண்டும் அனைத்து வகை பணிகளுக்கும் சேர்த்து 10,000 பேர் கூட தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. நான்காம் தொகுதி பணிக்கான தேர்வு எழுதியவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தையும், அரசுத்துறைகளின் தேவையையும் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நான்காம் தொகுதி பணியாளர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக, அதாவது 20 ஆயிரமாக அதிகரிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு ஒரு லட்சம் அரசு பணியிடங்களை தமிழ்நாடு அரசு நிரப்பப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.