அமைச்சர் – எம்.பி மோதலில் கலெக்டரை ஏங்க தள்ளிவிட்டீங்க?: அண்ணாமலை

அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.பி நவாஸ் கனி இடையே ஏற்பட்ட மோதலைக் குறிப்பிட்டு இதுதான் திமுக கூட்டணியின் நிலைமை, சண்டையில் கலெக்டரை தள்ளி விட்டுள்ளனர் என கண்டனம் தெரிவித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் எம்.பி நவாஸ் கனிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் வருவதற்கு முன்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் விழா தொடங்கியது. இதனால் கோபமடைந்த எம்.பி நவாஸ் கனி இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது அமைச்சர் ராஜகண்ணப்பன் இது குறித்து எம்.பிக்கு பதில் கொடுத்துள்ளார். இதனால் எம்.பி நவாஸ் கனி – அமைச்சர் ராஜகண்ணப்பன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த விவாகரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அமைச்சர் மற்றும் எம்.பி இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தன்னை தள்ளிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே எம்.பி நவாஸ் கனி, அமைச்சர் ராஜகண்ணப்பன் இடையேயான மோதல் குறித்த வீடியோ இணையத்தில் தீயாகப் வருகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி – திமுக அமைச்சர் இடையேயான இந்த மோதல், கூட்டணிக்குள் மோதல் வலுவடைந்துள்ளதைக் காட்டுவதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த மோதல் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து விமர்சித்துள்ளார். “திரைக்கு முன்னால் புன்னகை, திரைக்குப் பின்னால் அடிதடி. இதுதான் திமுக கூட்டணியின் உண்மை நிலவரம். திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்பி நவாஸ் கனி இடையே நடந்த சண்டையில் மாவட்ட ஆட்சியரை தள்ளிவிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜனநாயகம் என்ற ஒன்று திமுக ஆட்சியில் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியோ?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் பாஜக சாா்பில் நேற்று இரவு பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத் தலைவா்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்.பி மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

2014-ஆம் ஆண்டுக்கு முன்பு பொருளாதார வளா்ச்சியில் 13-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா, சீனாவுக்குப் பின் மூன்றாவது இடத்துக்கு இந்தியா முன்னேறும். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களாட்சியின் சாட்சியான செங்கோலை நிறுவியதன் மூலம் தமிழர்களின் கலாசாரத்துக்கு பெருமை கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் தமிழ் கலாசாரத்தை கொண்டு செல்ல பிரதமர் முயற்சி செய்து வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின் திமுகவின் மூன்றாம் தர பேச்சாளா் போல பேசி வருகிறார். பாஜகவினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். எமர்ஜென்சி அமல்படுத்தியபோது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியைக் கண்டு அஞ்சியது திமுகவினர்தான். கச்சத்தீவை இலங்கைக்கு அன்றைய காங்கிரஸ் அரசு தாரைவாா்த்தபோதும், மீன்பிடி வலைகளை உலர்த்தும் உரிமையை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தபோதும் இந்திரா காந்திக்கு அஞ்சி திமுக எதிர்ப்புக் குரல் கொடுக்கவில்லை. தி.மு.க யாரையும் கண்டு பயப்படாது என்று கூறுகின்றனர். ஆனால் எமர்ஜென்சியின் போது ஓடி ஓளிந்தனர். பயம் இல்லாமல் ஆட்சி புரிய பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும்.

அமைச்சரை அரசு மருத்துவமனை வேண்டாம் என்று தனியார் மருத்துவமனைக்கு மாற்றுகின்றனர். தனியார் மருத்துவமனையில் தான் உயர்தர சிகிச்சை கிடைக்கும் எனில் ஏழைகளையும் அங்கு அனுப்புங்கள். தவறு செய்யும்போது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். சமூக வலைதளத்தில் உண்மையை பதிவிட்ட எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்துள்ளனர். இன்னும் 9 மாதங்களில் திமுகவினரை தோ்தலில் எதிர்கொள்ள பாஜகவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். இன்று 4 எம்.எல்.ஏக்கள்தான். அவை நாளை 150 ஆக அதிகரிக்கும். உழைப்புதான் எங்கள் நம்பிக்கை. இவ்வாறு அவர் பேசினார்.