எனது கொள்கை என்பது நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது தான்: சீமான்!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் நாம் தமிழர் ஓட்டுகளை பிரிக்க முடியாது என சீமான் அடித்து கூறியுள்ளார்.

நடிகர் விஜய் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் இன்று சந்தித்து அவர்களை பாராட்டி, உதவித்தொகை வழங்கினார். இந்த விழாவில் நடிகர் விஜய் பேசிய சில கருத்துகள் அவர் அரசியலில் கால்பதிப்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. இந்த விழாவில் நடிகர் விஜய், ‛‛அம்பேத்கர், பெரியார் மற்றும் காமராஜர் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க உள்ளீர்கள். பணம் வாங்கிவிட்டு வாக்களிப்பது என்பது, நமது கண்களை நாமே குத்திக் கொள்வது போன்றது. ஒருவர் ஒரு வாக்குக்காக ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம். ஒரு தொகுதிக்கு 15 கோடி ரூபாய் செலவழித்தால், அந்த அரசியல்வாதி அதற்கு முன்னாள் எவ்வளவு சம்பாதித்திருக்க வேண்டும்? தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தங்களது பெற்றோரிடத்தில், இனி பணம் வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்காதீர்கள் என கூறிப் பாருங்கள். நீங்கள் சொன்னால் அது நிச்சயமாக நடைபெறும். ஏனென்றால், நீங்கள்தான் அடுத்த முதல் தலைமுறை வாக்காளர்கள். இந்த பொதுத் தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுடன் பேசி, ஊக்கமளித்து அவர்களும் வெற்றியடையச் செய்யுங்கள். எந்த சூழ்நிலையிலும் தவறான முடிவுகளை மாணவர்கள் எடுக்க வேண்டாம்” என பேசியிருந்தார்.

இந்நிலையில் தான் நடிகர் விஜயின் அரசியல் சார்ந்த நகர்வு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

அரசியல்வாதிகள் பணம் கொடுக்கக்கூடாது என்பதை நான் கடந்த 13 ஆண்டுகளாக கூறி வருகிறேன். என் கருத்தை தான் நடிகர் விஜய் பேசியுள்ளார். என் கருத்தை அடிக்கோடிட்டு தான் விஜய் காண்பித்துள்ளதாக எடுத்து கொள்ள வேண்டும். தேர்தலில் பணம் வழங்குவதை தடுக்கும் பொறுப்பு என்பது எனக்கும், நடிகர் விஜய்க்கும் மட்டும் இல்லை. அனைவருக்கும் அதற்கான பொறுப்பு உள்ளது. ஓட்டுக்கு காசு கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் முறையாக செயல்படுத்துவது இல்லை. இது தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய தோல்வியாக உள்ளது. அதோடு தேர்தல் ஆணையத்தின் சந்தர்ப்பவாத செயலால் தான் பணப்பட்டுவாடாவும் நடக்கிறது.

நடிகர் விஜயின் அரசியல் யாரை பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதிமுக, திமுகவை பிடிக்காதவர்கள் நடிகர் விஜய்க்கு ஓட்டளிக்க முன்வருவார்கள். என் ஓட்டை நடிகர் விஜயால் பிரிக்க முடியாது. மேலும் ஓட்டு என்பது நடிகர் விஜயின் கோட்பாடு, கருத்து மற்றும் அவரது களபோராட்டம் உள்ளிட்டவற்றை சார்ந்து அமையும். நடிகர் ஒருவர் அரசியலுக்கு வந்தால் அவரது ரசிகர்கள், அவர் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் தான் ஓட்டளிப்பார்கள். கொள்கை, கோட்பாட்டை பார்த்து தான் மற்றவர்கள் அவருடன் கைக்கோர்ப்பார்கள். மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து அவர்களின் வாக்கை பிரிப்பார். இவர்களின் வாக்கை பிரிப்பார் என நாம் கூறிவிட முடியாது. இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் திரைப்படத்தில் நடிப்பதே நாடாள தகுதி என்ற நிலை உள்ளது. எனது கொள்கை என்பது நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது தான். ஏனென்றால் மொழி, இனம், நிலவள பாதுகாப்புக்காக போராடும் தகுதியானவர்கள் எடுபடாமல் போய்விடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.