மோடிக்கும், ஈடிக்கும் பயப்பட மாட்டோம்: உதயநிதி ஸ்டாலின்!

அமலாக்கத்துறை பாஜகவின் தொண்டர் படையாக செயல்படுகிறது. திமுக ஒருபோதும் பிரதமர் மோடிக்கும் அமலாக்கத்துறைக்கும் பயப்படவே செய்யாது என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு சிறப்பான வாதங்களை வைத்தது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டை சிப்காட் அருகே தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இடையப்பட்டி பகுதியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நம்முடைய எதிரிகள் ஸ்டாலினை பார்த்து ‛ஸ்டாலின் இஸ் மோர் டேன்ஜரஸ் தன் கலைஞர்’ என சொல்கிறார்கள். எத்தனை மோடி, எத்தனை அமித்ஷாக்கள் எத்தனை பேர் வந்தாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது. நாம் அனைவரும் ஒன்றாக ஓரணியில் திரண்டு இருந்தால் பாசிச பாஜகவால் நம்மை அசைக்கக் கூட முடியாது. அதனை தான் ஜல்லிக்கட்டு போராட்டம் தான் காட்டி உள்ளது. பொதுவாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு தொண்டர் படை இருக்கும். பாஜகவின் தொண்டர் படையாக வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறையினர் உள்ளனர். இவர்கள் தேர்தல் சமயத்தில் தான் செயல்படுகின்றனர். அதுவும் எதிர்க்கட்சிகளை பயமுத்துவதற்காக பயன்படுத்தப்படுகின்றனர். 2014ல் இருந்து இதுவரை 121 அரசியல் தலைவர்களை அமலாக்கத்துறை விசாரித்துள்ளது. இதில் 115 பேர் எதிர்க்கட்சியினர். இதில் இருந்தே அமலாக்கத்துறையின் செயல்பாடு தெரிகிறது.

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அணியின் எம்பி சஞ்சய் ராவத், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் கட்சியை சேர்ந்த 19 தலைவர்கள், பீகாரில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தெலங்கானாவில் அம்மாநில முதல்வரின் மகள் கவிதா, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் டிகே சிவக்குமார் உள்ளிட்டவர்களிடம் மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தி உள்ளன. தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி உள்ளது. அவருக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல், கழிவறை செல்ல விடாமல் விசாரித்துள்ளனர்.

மேலும் அதானி என்பவரை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அவர் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர். அதானி இன்றி மோடி வெளிநாடு செல்லமாட்டார். அதானியின் விமானத்தில் தான் மோடி வெளிநாடுகளுக்கு செல்வார். அதானி உலக பணக்காரர் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். அதானி நிறுவனம் குறுகிய காலத்தில் பணம் சம்பாதித்தது பற்றி ஹிண்டர்பர்க் அறிக்கை வெளியிட்டது. அதுபற்றி ராகுல் காந்தி கேள்வி எழுப்பிய நிலையில் அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. திமுகவினர் பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் வந்தவர்கள். மோடிக்கும், அமலாக்கத்துறைக்கும் பயப்பட மாட்டோம். இந்த ரெய்டு எல்லாம் திமுகவுக்கு ஒன்றும் புதிது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.