செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனு!

காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெறுவதற்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் 21ஆம் தேதி விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைதான செந்தில்பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 15 ஆம் தேதி இரவு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் செந்தில் பாலாஜி இருந்து வரும் நிலையில், எட்டு நாட்கள் அவரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொள்ளவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

நீதிமன்ற அலுவலகர்கள் மூலம் இந்த உத்தரவு நகல் செந்தில்பாலாஜிக்கு நேரில் வழங்கப்பட்டது. அவரும் உத்தரவு நகலை கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார். செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கும்போது அவரிடம் என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும்? என அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே முடிவு செய்து கேள்விகளின் தொகுப்பை தயார்நிலையில் வைத்திருந்தனர். அனுமதி அளித்த 8 நாட்களில் முதல் நாளான 16-ந்தேதி அவரிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. கோர்ட்டு உத்தரவு நகலை அமலாக்கத்துறையினர் பெறுவதற்கும், அந்த உத்தரவு நகலை கோர்ட்டு அலுவலர்கள் செந்தில்பாலாஜியிடம் ஒப்படைத்து கையெழுத்து பெறுவதற்கும், அதன்பின்பு நீதிமன்ற காவலில் இருந்து அமலாக்கத்துறை காவலுக்கு செந்தில்பாலாஜியை எடுத்துக்கொள்வதற்கும் இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டது. இதனால், அன்றைய தினம் செந்தில்பாலாஜியிடம் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை.

அமலாக்கத்துறை விசாரணையின் போது மருத்துவ சிகிச்சைக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ள நிலையில் செந்தில் பாலாஜியை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதால் அவரிடம் விசாரணை நடத்துவதில் அமலாக்கத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை நாளை மறுதினம் ஜூன் 21ஆம் தேதி புதன்கிழமை விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி நாளை மறுநாள் இந்த மனு நீதிபதி சூரிய காந்த் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.