திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. தனது தந்தைக்காக பிரம்மாண்டமாக ஆழித்தேர் போன்ற அமைப்பில் கலைஞர் கோட்டம் அமைத்து தனது சகோதரி செல்வியோடு இணைந்து முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
திருவாரூர் அடுத்த காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ. 12 கோடி மதிப்பில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் 2 திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கலைஞரின் முழு உருவச் சிலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மிக பிரம்மாண்டமாக திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் இந்த கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவிற்கு அனைவரும் வர வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார் மு.க ஸ்டாலின். தனது தந்தையின் நூற்றாண்டு நினைவாக கட்டிய கலைஞர் கோட்டத்தை தனது கரத்தாலும் தனது சகோதரி செல்வியின் கரத்தோடு இணைந்து திறந்து வைத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
இந்த கலைஞர் கோட்டத்தில் பல்வேறு சிறப்புகள் உள்ளன. கருணாநிதி சிலை, முத்துவேலர் நூலகம், கருணாநிதியின் நினைவுகளை போற்றக்கூடிய பழைய புகைப்படங்கள், அவரது போராட்டமிக்க பொதுவாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், கலைஞர் அடைக்கப்பட்டிருந்த சிறை போன்ற கட்டமைப்புகள், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பும் வகையில் சிறிய திரை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும் 2 திருமண மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன. நூலகத்தை திறந்து வைத்த பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிற்கு கருணாநிதியின் புகைப்படங்களைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் எடுத்துக்கூறினர். தனது பல ஆண்டு கனவான கலைஞர் கோட்டத்தை சிறப்பாக கட்டி அதை தனது கரத்தாலேயே மகிழ்ச்சியோடு திறந்து வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திறப்பு விழா நிகழ்ச்சியில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றார். பின்னர் விழாவில் பேசியதாவது:-
சமூக நீதிக்கான வருங்கால நமது போராட்டங்களுக்கு கருணாநிதியின் கொள்கைகள் வழிகாட்டும். கருணாநிதி கடைபிடித்த சமூக நீதி, சமத்துவம் போன்ற கொள்கைகளை தேசிய அளவில் செயல்படுத்துவது அவசியம். திராவிட கருத்தியலை நிலை நிறுத்தியதில் முக்கிய தலைவராக கருணாநிதி விளங்கினார். கருணாநிதியின் கொள்கைகளும் சிந்தனைகளும் இன்றளவும் அவசியமாக இருப்பதை நினைவு கூறவே இங்கு கூடியிருக்கிறோம். கருணாநிதியின் சிந்தனைகள் அடுத்தத்தடுத்த தலைமுறையிடம் செல்வாக்கு செலுத்தி வருகிறது. சமூக நீதியை காப்பதில் மிகப்பெரும் பங்காற்றியவர் கருணாநிதி. சாதி ரீதியான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என வலியுறுத்தினார். இவ்வாறு அவர் பேசினார்.