கருணாநிதி ஆட்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 விவசாயிகள் உயிா்த் தியாகம் செய்துள்ளனா். மின்சாரத்துக்காக போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.
திருப்பூா் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள விவசாய தியாகிகள் நினைவிடத்தில் பாஜக., மாநிலத் தலைவா் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினாா். பின்னா் அவா் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மின் கட்டணம் குறைக்க போராடிய விவசாயிகள் மீது அப்போதைய முதல்வா் கருணாநிதி ஆட்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 விவசாயிகள் உயிா்த் தியாகம் செய்துள்ளனா். விவசாயிகள் மீதான திமுக.,வினா் பாா்வை தற்போது வரையில் மாறவில்லை. இந்த சம்பவத்தில் உயிரிழந்த 3 விவசாயிகளுக்கு தமிழக அரசு விரைவில் மணிமண்டபம் கட்ட வேண்டும். பல்வேறு காலகட்டங்களில் தமிழகம் முழுவதும் உயிரிழந்த 46 விவசாயிகளின் புகைப்படங்கள் இங்கு கட்டப்படும் மணிமண்டபத்தில் வைக்கப்பட வேண்டும்.
பிரதமா் மோடி அரசாங்கம் இலவச மின்சாரத்துக்கும், விவசாயிகளுக்கும் எப்போதும் துணை நிற்கும். தமிழகத்தில் கள்ளுக்கடை திறப்பதை பாஜக., ஆதரிக்கும். ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமை பிரதமா் மோடியையே சாரும். இவ்வாறு அவர் கூறினார்.