வெளியில் இருந்து வந்த மதங்களே பிரச்சினைகளுக்கு காரணம்: ஆளுநர் ஆர்.என். ரவி

என்றைக்கு வெளிநாடுகளில் இருந்து மதங்கள் இங்கு வந்தனவோ அப்போதுதான் பிரச்சினைகள் உருவாகின என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மேட்டுக்குப்பத்தில் உள்ள வள்ளலார் சித்தி அடைந்த இடத்தை பார்வையிட்டார். மேலும் வள்ளலார் கருங்குழி கிராமத்தில் வாழ்ந்த இடத்தையும் அவர் பார்வையிட்டார். வள்ளலார் பிறந்த இடமான மருதூரில் வள்ளலாருக்கு மரியாதை செலுத்தி உலகளாவிய அன்பு, தொண்டு, கருணை ஆகியவற்றின் நித்திய போதனைகளை நினைவுகூர்ந்தார் ஆளுநர் ரவி. இதனைத் தொடந்து வடலூரில் வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது:-

வள்ளலார் என்பவர் 10,000 ஆண்டுகால சனாதன தர்மத்தின் உச்சநட்சத்திரம். நான் ஒரு சனாதன தர்மத்தின் மாணவன். பல முனிவர்களின் நூல்களைப் படித்திருக்கிறேன். வள்ளலாரின் நூல்கள் பிரமிப்பைத் தருகின்றன. உலகின் அனைத்துமே ஒரே குடும்பம். சனாதன தர்மம் என்பது நம்மில் நம்மை காண்பது; உங்களில் என்னை; என்னில் உங்களை காண்பதாகும். வள்ளலார் சனாதன தர்மத்தின் எதிரொலியாகவே வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார். சனாதன தர்மம் குறித்த அறியாமை இன்னமும் இருக்கிறது. காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சனாதன தர்மம் பற்றி இன்னமும் சிலர் தவறாக எண்ணுகின்றனர். இந்தியா, பாரதம் சனாதன தர்மத்தை அடிப்படையாக கொண்டது. வெளிநாட்டு மதம் , வழிபாட்டு முறைகளால் நமது அடையாளம் காணாமல் போய்விட்டது.

இந்திய மரபில் சிறு, பெருந்தெய்வ வழிபாடுகள் இருப்பினும் மோதல்கள் இருந்தது இல்லை .நமது நாட்டுக்கு வெளியே இருந்து வந்த மதங்கள்தான் பிரச்சனைகளுக்கு காரணம். வெளியே இருந்து வந்த மதங்கள் தங்களுடைய மதமே பெரியது என கூறின. இதனால்தான் இந்தியாவில் பிரச்சனை உருவானது. 1852-ம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், இந்திய சமூகக் கட்டமைப்பு அழிய வேண்டும் என எழுதினார். இந்திய சமூகக் கட்டமைப்பை குலைக்க நினைத்த கார்ல் மார்க்ஸ் ஆங்கிலேயருக்கு உதவியவர். இந்தியர்களை பற்றி தவறாக எழுதி வைத்திருப்பவர் கார்ல் மார்க்ஸ். நமது பாரதம் உலகின் வல்லராசாகும். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

ஆளுநர் ரவியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. சனாதன தர்மம், வைதீக மதம் ஆகியவற்றை நிராகரித்தவர் வள்ளலார்; வடலூர் வள்ளலார் சபை வைதீகத்துக்கு எதிரானது என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஒரு தீர்ப்பிலேயே திட்டவட்டமாக உறுதி செய்திருக்கிறது. ஆனால் அந்த வள்ளலாரையே சனாதன தர்மத்தின் உச்சநட்சத்திரம் என ஆளுநர் ரவி பேசியது பிழையானது என்கிற கருத்துகள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகின்றன. அதேபோல கார்ல் மார்க்ஸ், உழைக்கும் வர்க்கம், சமூகத்தின் நிலைமை குறித்து எழுதியவற்றை ஆங்கிலேயருக்கு உதவினார் என சுருக்கிப் பார்ப்பதும் தவறான பார்வை என்கின்றனர் நெட்டிசன்கள்.

ஜாதி, மத வேறுபாடுகளை களைந்து அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் பாடுபட்ட மகா துறவி வள்ளலாரை, ஜாதிய படிநிலைகளை தூக்கிப்பிடிக்கும் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் எனக் கூறுவதா என ஆளுநர் ரவியை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.