முதலமைச்சர் ஸ்டாலின் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு உரிய நிதியை, மானியத்தை உடனடியாக வழங்கிட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
அறிவுக் கோயில்களாக விளங்கும் பல்கலைக்கழகங்களில் அறிவின் இரகசியங்களை கற்றுக் கொள்ளும் பயிற்சியாளர்களாக மாணவர்கள் விளங்குகிறார்கள். சமூக மாற்றம் மற்றும் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையங்களாக பல்கலைக்கழகங்கள் விளங்குகின்றன. இப்படிப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு போதுமான நிதியை வழங்குவது ஒவ்வொரு மாநில அரசின் கடமையாகும். ஆனால், தமிழ்நாட்டில் இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலை நிலவுகிறது.
பல்கலைக்கழக மானியக் குழுவால் ‘சிறந்த திறன்கொண்ட பல்கலைக்கழகம்’ என்ற அந்தஸ்தை பெற்றதும், ஐந்து நட்சத்திர தகுதியைப் பெற்றதும், இலண்டன் பல்கலைக்கழகத்தின் மாதிரியில் துவங்கப்பட்டதும், மிகப் பழமை வாய்ந்ததுமான பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம். இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் பதவியை வகித்த டாக்டர் S. இராதாகிருஷ்ணன், திரு. V.V. கிரி, திரு. R. வெங்கட்ராமன், டாக்டர் A.P.J. அப்துல் கலாம் ஆகியோரை இந்த நாட்டிற்கு அளித்த பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம். நோபல் பரிசு பெற்ற சர். CV. இராமன் மற்றும் டாக்டர் S. சந்திரசேகர் ஆகியோரை இந்த நாட்டிற்கு அளித்த பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம். இப்படி பிரசித்திப் பெற்ற சென்னை பல்கலைக்கழகத்தில், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மாதச் சம்பளத்தைக்கூட தர இயலாத சூழ்நிலை நிலவுவதாகவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் மொத்த மாதச் செலவிற்கு 18.61 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், 31-05-2023 அன்றைய நிலவரப்படி சென்னைப் பல்கலைக்கழகத்திடம் 5 கோடி ரூபாய் மட்டுமே இருந்ததாகவும், சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அன்றாட செலவுகளுக்கு மட்டும் 11.5 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும், இதனைத் தவிர்க்க பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதியிலிருந்தும், அறக்கட்டளை நிதியிலிருந்தும் 7.6 கோடி ரூபாய் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், சென்னைப் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தி.மு.க. அரசோ அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு கூட நிதியை ஒதுக்காமல் காலந்தாழ்த்தி வருவதாக செய்திகள் வருகின்றன. உள்ளாட்சி நிதித் தணிக்கை இயக்ககம் அரசுக்கு பரிந்துரைத்த 2021-2022 ஆம் ஆண்டிற்கான 11.46 கோடி ரூபாய் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பங்கு குறித்து எவ்வித விவரமும் தங்களிடம் இல்லை என்று பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமைதான் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நிலவுவதாக தகவல்கள் வருகின்றன.
ஆவின் நிறுவனத்தில் குளறுபடி, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் குளறுபடி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் குளறுபடி, பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் குளறுபடி என்ற வரிசையில் தற்போது சென்னைப் பல்கலைக்கழகமும் இடம் பெற்றுள்ளது வேதனையளிக்கும் செயலாகும். ‘நிதிப் பற்றாக்குறை’ குறைந்துவிட்டது, ‘வருவாய்ப் பற்றாக்குறை’ குறைந்துவிட்டது என மார்தட்டிக் கொள்ளும் தி.மு.க. அரசு, எதிர்கால மாணவ, மாணவியரை உருவாக்கும் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை உரிய நேரத்தில் ஒதுக்காமல் காலந்தாழ்த்துவதும், சென்ற ஆண்டிற்கான கூடுதல் நிதியை இன்னும் அளிக்காமல் இருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
ஒருபக்கம் சட்டம்-ஒழுங்கு சீரழிவு என்றால் மறுபக்கம் நிதிச் சீரழிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பத்திரிகைகளைத் திறந்தாலே, போராட்டம், ஆர்ப்பாட்டம், சம்பளம் வழங்காமை, பதவி உயர்வு வழங்காமை, அகவிலைப்படி உயர்வு வழங்காமை, கொலை, கொள்ளை என்ற செய்திகள்தான் வந்து கொண்டிருக்கின்றன.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, உரிய நிதியை, மானியத்தை உடனடியாக சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கிடவும், பிற பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான நிதியையும் உடனடியாக விடுவித்திடவும் உத்தரவிடுமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.