தமிழ்நாட்டில் இருந்து அடுத்த பிரதமர் வந்தால் அதற்கு அடுத்த நாள் ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவிக்கு வழியனுப்பு விழா கூட இருக்காது, தானாகவே ஆளுநர் ஓடக்கூடிய சூழல் வரும் என திமுக எம்.பி ஆ.ராசா பேசியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சரின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் ஆளுநர் தெரிவித்த கருத்துகள் திமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கம் செய்யக் கோரி, மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. மதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், அரியலூர் மாவட்ட செயலாளரும், அரியலூர் எம்.எல்.ஏவுமான சின்னப்பா ஆகியோர் தலைமையில் கையெழுத்து இயக்கம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ. இராசா கலந்து கொண்டு, முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய ஆ.ராசா கூறியதாவது:-
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் சுமுகமான நடைமுறையில் நல்லாட்சி நடைபெற்றால், முதல்வர் ஸ்டாலினுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் அதனை தடுக்கும் விதமாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெற்றால் திராவிட சித்தாந்தம் வளர்ந்து விடும், திராவிட சித்தாந்தத்தை வளரவிட்டால் தமிழ்நாட்டிற்குள் காவியை கொண்டு வர முடியாது என்ற காரணத்தினால் ஆளுநர் தமிழக அரசுக்கும் திமுகவிற்கும் எதிராகச் செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடி, அமித்ஷா, ஆகியோரோடு கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டு வரும் ஆளுநரை தூக்கி எறிய கூடிய நாள் வெகு விரைவில் இல்லை.
தமிழரை பிரதமர் ஆக்கப்போகிறோம் என்கிறார் அமித் ஷா. எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமர் என்பதை தமிழ்நாடு தான் தீர்மானிக்கும். அதனை முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு செய்வார். அப்படி ஒரு ஆட்சி அமைந்த இரண்டாவது நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வழியனுப்பு விழா கூட நடைபெறாது, தானாகவே அவர் தமிழ்நாட்டையும்ஆளுநர் மாளிகையையும் விட்டு ஓடி விடுவார். அந்த சூழலை உருவாக்குவோம். யார் அமைச்சராக இருக்கலாம், யார் அமைச்சராக இருக்கக்கூடாது, என முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவர் முதலமைச்சர். அப்படித்தான் சட்டம் சொல்கிறது. அதிலேயும் ஆளுநர் குறுக்கே வந்து கருத்து சொல்கிறார். முதலமைச்சருக்கு நல்ல பெயர் கிடைக்கக்கூடாது என ஆளுநர் செயல்படுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.