மணிப்பூர் மாநிலம் பற்றி எரியும் நிலையும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? நடிகர் அஜித் அரசியலுக்கு வருவாரா? என எப்ப பார்த்தாலும் இதே கேள்வியை பத்திரிகையாளர்கள் கேட்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வேதனையை வெளிப்படுத்தினார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்தை மதிமுக நடத்தி வருகிறது. இது தொடர்பாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமையிலான மதிமுக குழுவினர் நேற்று விடுதலை சிறுத்தைகள் தலைமையகமான அம்பேத்கர் திடல் சென்றனர். அங்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி உள்ளிட்டோரிடம் கையெழுத்து பெற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது திருமாவளவனிடம் அண்மையில் நடிகர் விஜய், மாணவர்களுக்கு சான்றிதழ் கொடுத்து அறிவுரை வழங்கியது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு திருமாவளவன் கூறியதாவது:-
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்பது எப்படி தெரியும்? யூகத்தின் அடிப்படையில் எப்படி பதில் சொல்வது? மாணவர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை சொல்லி இருக்கிறார். உடனே இன்னும் ஒருபடி மேல போய் நீங்கள் அவர் அரசியலுக்கு வருவாரான்னு கேள்வி கேட்கிறீங்க. மணிப்பூரில் இவ்வளவு பெரிய வன்முறை வெறியாட்டம் நடந்துகிட்டு இருக்கு. அதைப்பற்றி கொஸ்டினே வரலை.. இங்க விஜய் பற்றிய கொஸ்டினாவே இருக்கு. இது மீடியா ஹைப்.. மக்களுக்கு எதிரானது. யாருமே மணிப்பூர் பற்றி கேள்வியே கேட்கலையே.. பத்திரிகையாளர்களுக்கும் சோசியல் கான்சியஸ் இருக்க வேண்டாமா? உங்களுக்கும் ஒரு பொலிட்டிக்கல் கான்சியஸ் இருக்க வேண்டும்! எப்ப பார்த்தாலும் சினிமாகாரங்க அரசியலுக்கு வராங்களா? சினிமாகாரங்க அரசியலுக்கு வராங்களா?ன்னு கேள்வி கேட்டுகிட்டே இருக்கீங்க
ரஜினி வருவாரா? வருவாரா?ன்னு காலம் பூராவும் கேட்டீங்க.. இப்ப விஜய் வருவாரா? வருவாரான்னு கேட்கிறீங்க? அப்புறம் அஜித் வருவாரா? அப்படி எல்லாம் கிடையாது. மக்களை ரொம்ப முட்டாளுக்குது இந்த கொஸ்டின்ஸ். ஏன் எப்ப பார்த்தாலும் நடிகர்கள் வரப்போறாரா? வந்தா என்ன ஆகும்னு கேள்வி கேட்கிறீங்க? வேற எந்த மாநிலத்திலும் சினிமா ஸ்டார்களுக்கு முக்கியத்துவம் தர்றதே இல்லை. இது மீடியா ஹைப்.. இது மீடியா பண்ணக் கூடிய டேக்டிஸ். எதுக்கு இது? அவரு வரட்டும்.. வந்த பிறகு கேள்வி கேளுங்க.. மணிப்பூர் எனும் ஒரு மாநிலமே பற்றி எரியுது.. பிரதமர் மோடி யோகா பண்ணுங்க என அட்வைஸ் செய்கிறார். மணிப்பூரில் என்ன நிலைமை? என பிரதமர் மோடி போய் பார்க்கனும் அல்லவா? அப்படி இல்லை எனில் மணிப்பூர் பாஜக அரசை டிஸ்ம்ஸ் செய்யுங்க.. அம்மாநில ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய எல்லா முகாந்திரமும் இருக்கே.. ஏதோ பக்கத்து நாட்டு அதிபரிடம் உதவி கேட்பது போல மணிப்பூர் முதல்வர், மிசோரம் முதல்வரிடம் மைத்தேயி மக்களின் பாதுகாப்புக்காக உதவி கேட்கிற நிலைமை இருக்கிறது. இவ்வாறு தொல்.திருமாவளவன் பதிலளித்தார்.