பிகாரில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் பாட்னா சென்ற நிலையில் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை சந்தித்தார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் முனைப்பில் பாஜகவுக்கு எதிரான சித்தாந்தங்கள் கொண்ட கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. குறிப்பாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக தான் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு பாட்னாவில் நிதிஷ் குமார் கடந்த 12ம் தேதி ஏற்பாடு செய்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் அன்றைய தினம் பங்கேற்ற முடியாத நிலையில் இருந்தது. இதனால் அந்த கூட்டம் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி இன்று பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பாட்னாவுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அதன்படி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் நேற்று பாட்னா சென்றார். பாட்னா சென்ற முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசினார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் அவரது இல்லத்துக்கு சென்றார். லாலு பிரசாத் யாதவை பார்த்தவுடன், ஸ்டாலின் கீழே குனிந்து அவரது காலை தொட்டு வணங்கினார். அதன்பிறகு தனது தந்தையும், மறைந்த முதல்வருமான கருணாநிதியின் வரலாற்றை கூறும் புத்தகத்தை அவருக்கு வழங்கினார். அதன்பிறகு லாலு பிரசாத் யாதவ், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது லாலு பிரசாத்தின் மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உடன் இருந்தார்.